லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் மிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது.

லோகேஷ் கனகராஜ்ஜின் LCUக்குள் “லியோ” திரைப்படம் வருமா? வராதா? என்பதுதான் இங்கே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதில் படம் வெளிவந்தப் பிறகுதான் தெரிய வரும். ஆனால் ரசிகர்கள் பலரும் அவரவர்களுக்கு ஏற்றார் போல் பல குறியீடுகளை கண்டுபிடித்து “லியோ” திரைப்படம் LCUக்குள்தான் வரும் என கூறி வருகின்றனர்.
“லியோ” படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மேத்யூ உட்பட பலரும் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இத்திரைப்படத்தில் மடோன்னா செபஸ்டியன், அனுராக் காஷ்யப் ஆகியோரும் நடித்துள்ளதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவருகின்றன.

இவ்வாறு ஒரு மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது. இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தில் நடித்த மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விஜய்யுடன் தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் அப்போதெல்லாம் தனது சம்பளம் 4 லட்சம் எனவும் ஆனால் விஜய்க்கு 2 லட்சம்தான் சம்பளம் எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “இன்று விஜய் இந்தளவுக்கு சம்பளம் வாங்குகிறார் என்றால் அவரது கடின உழைப்புதான் காரணம். இந்த வயதிலும் ஹீரோயினுடன் அந்த ஆட்டம் ஆடுகிறாரே. அந்த உழைப்புக்கு கிடைத்த பலன்தான் அவரின் சம்பளம்” எனவும் கூறியிருந்தார். “லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ரூ.200 கோடிகள் சம்பளமாக பேசப்பட்டதாக செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.





