பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த நிலையில், மாமன்னன் திரைப்படம் முடித்த கையோடு சிறிய பட்ஜெட் படம் ஒன்றையும் மாரி செல்வராஜ் இயக்கி முடித்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு வாழை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதிக்கரையோரம் வாழும் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கலையரசன், நிகிலா, திவ்யா துரைசாமி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதில் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை சுற்றியே படத்தின் மையக் கதை இருக்கும் என்று கூறப்படுகிறது. முதலில், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காகத்தான் இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். மேலும் நேரடியாக இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் தனது முடிவை தயாரிப்பு நிறுவனம் மாற்றி இருக்கிறது. அதன்படி முதலில் திரையரங்குகளில் வாழை திரைப்படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் மாரி செல்வராஜ் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் துருவ் விக்ரமுடன் இணைந்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே துருவ் உடன் மாரி இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் மாமன்னன் படத்தை எடுத்தார். இப்படியான சூழலில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்து சூட்டிங்கிற்கு கிளம்பியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மனத்தி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
உள்ளூர் விளையாட்டில் ஆரம்பித்து, ஆசிய போட்டியில் எப்படி அவர் தங்கம் வென்று கொடுத்தார் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் ஒன்று இரண்டு தினங்களில் தூத்துக்குடியில் இதன் சூட்டிங் தொடங்குகிறது.





