சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய திரைப்படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தில் அமீர் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோக பசுபதி, லால் என முக்கியமான நட்சத்திரங்களும் இடம்பெற்று இருக்கிறார்கள். கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். ரஜிஷா விஜயனுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கபடி விளையாட்டை மையப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை தான் இதில் படமாக்கி இருக்கிறார்கள். 90 நாட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்காக, இரண்டு ஆண்டுகள் துருவ் விக்ரம் கடுமையாக உழைத்ததாக மாரி செல்வராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். படத்தின் பிரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற அதில் பைசன் பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ்,
எனது உச்சபட்ச கர்வமாகவும், பெருமையாகவும் நான் பைசன் திரைப்படத்தை பார்க்கிறேன். நான் முதல் முறையாக தைரியமாக ஒரு விஷயத்தை அணுகி இருப்பதுதான் இதற்கு காரணம் என்று கூறுவேன். எனது மற்ற திரைப்படங்கள் எனது தரப்பில் இருந்த வலிகளை மட்டும் எடுத்துக் கூறும்.
ஆனால் இந்த முறை சமூகம் சார்ந்த கவலையையும், ஒட்டுமொத்த தென் தமிழ் நாட்டு மக்களின் வலியையும் எடுத்துக் கூறி இருக்கிறேன். நிச்சயமாக இந்த பைசன் திரைப்படம் ஒரு பெரிய விவாதத்தை உண்டு பண்ணும் என்று நான் நம்புகிறேன். நான் இதுவரை பைசன் திரைப்படத்திற்கு ஆகதான் இவ்வளவு கற்றுக் கொண்டேனா என்ற எண்ணம் கூட தோன்றியது. பைசன் திரைப்படம் எனக்கு கொடுத்த அழுத்தம் இந்த தமிழ் சமூகத்திற்கும் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
இந்த விஷயத்தில் பைசன் படத்தின் வெற்றியை விட, தமிழ் சமூகம் எப்படி இதனை எடுத்துக் கொள்கிறது என்பதை பார்ப்பதிலும் நான் ஆர்வமாக இருக்கிறேன். பொதுவாக நான் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே கிடையாது. கொண்டாடும் மனநிலையில் என் குடும்பம் இருந்தது இல்லை. பால்ய நண்பனின் மரணத்தைப் போல நான் தீபாவளியை பார்க்கிறேன் என முன்பு ஒரு முறை எழுதி இருந்தேன். ஆனால் அதே தீபாவளிக்கு எனது திரைப்படம் வெளியாகும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. முதல்முறையாக நான் தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





