புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களாக வெற்றி கண்டன. அந்த வகையில் இயக்குனர் ப நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் 2 வேடங்களில் நடித்த படம் மாட்டுக்கார வேலன். 1970களில் வெளிவந்த இந்த படத்தில் ஜெயலலிதா லட்சுமி 2 பேரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
மாட்டுக்கார வேலன் படத்தின் 100வது நாள் வெற்றிவிழா மதுரையில் நடந்தது. அந்த விழாவில் எம்ஜிஆர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். அப்போது இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து 100 நாட்களாக தினமும் இரவு காட்சி பார்த்து வரும் ஒரு ரசிகையை மேடையில் அறிமுகப்படுத்தினர்.
அவர் 70 வயதான பாட்டி. மதுரையில் கீரை விற்பவர். அவர்தான் தினமும் மாட்டுக்கார வேலன் படத்தை தினமும் இரவு காட்சி பார்த்திருக்கிறார். படம் வெளியான நாள் முதல் 100 நாட்களாக தினமும் தொடர்ந்து அவர் எம்ஜிஆர் படத்தை பார்த்திருக்கிறார்.
மேடைக்கு வந்த அந்த பாட்டியிடம், எதுக்கு பாட்டி என் படத்தை தொடர்ந்து 100 நாள் பார்த்தீங்க? அது உங்களுக்கு சலிப்பாக இல்லையா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி, அந்த படத்தில் நீ இருக்கியேப்பா. உன் முகத்தை தினமும் பார்த்தாலே எனக்கு மனசுல இருக்கிற கஷ்டம் எல்லாம் போயிடும். அதனால்தான் தினமும் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட எம்ஜிஆர் தினமும் கீரை வித்த பணத்துல 3 ரூபாயில் 1 ரூபாய் எனக்காக செலவு செய்த படம் பார்த்திருக்கீங்க. அந்த 100 ரூபாய்க்கு நான் 1000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லி பணத்தை தந்திருக்கிறார். அதை வாங்க மறுத்த அந்த பாட்டி, நீ என் புள்ளை மாதிரி. புள்ளை கிட்ட பெத்த தாய் பணம் வாங்குவாளா என்று கேட்டு மறுத்திருக்கிறார்.
இப்படி தன் மீது தாய்மார்கள் அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார்களே என்று அந்த நேரத்தில் எம்ஜிஆர் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். அந்த பட விழா மேடையில் இருந்த படக்குழுவினரும் எம்ஜிஆர் மீது கீரை விற்கும் பாட்டிக்கு இருந்த அன்பை பார்த்து அவர்களும் ஆச்சரியப்பட்டுள்ளனர். இப்படி எம்ஜிஆர் தந்த 1000 ரூபாயை மறுத்து தன் அன்பை அந்த பாட்டி வெளிப்படுத்தி இருக்கிறார் அந்த மூதாட்டி.





