வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பலகட்டமாக முயற்சித்தாலும் தீவிரமாக உழைத்தாலும் பலருக்கும் வாழ்க்கை சாதகமாக இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு வாழ்க்கை பொற்காலமாக அமைகிறது. கேட்காமலேயே எல்லாம் கிடைக்கிறது.
அப்படிப்பட்ட சில விஷயங்கள் சிலருக்கு வாழ்க்கையில் நடந்து விடுகிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆரை ஒருமுறை நேரில் பார்த்து விட மாட்டோமா, என்று ஏங்கிய மக்கள் லட்சக்கணக்கில் இருந்தனர். இப்போதும் அவர் புகழை பாடிக்கொண்டு இருக்கின்றனர். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்தும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை மறையவில்லை.
ஆனால் எம்ஜிஆரே நீச்சல் கற்றுக் கொடுத்த ஒரு அனுபவம் நடிகர் கமலுக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, ஆனந்தஜோதி படம் எடுத்த போது இராமாவரம் தோட்டத்துக்கு எம்ஜிஆர் வீட்டுக்கு என்னையும் அழைத்து போனார்கள். தண்ணீரில் அடுத்த நாள் காட்சி படமாக்கப்பட இருந்தது. அவங்க வீட்டுல சாப்பிட போயிருந்தோம்.
தண்ணீர்ல சீன் எடுக்க போறோம்ன்னு எம்ஜிஆர் சொன்னதும் எனக்கு நீச்சல் தெரியாதுன்னு சொல்லிட்டேன். சாப்பிட்டு முடிச்சதும் என்னை அங்கிருந்த குளத்துக்கு கூட்டீட்டு போயிட்டார். எனக்கு முதன்முதலில் நீச்சல் கத்துக்கொடுத்தது எம்ஜிஆர் அவர்கள்தான்.
தண்ணீக்குள்ள என்னை அவர் கை மேலே படுக்க வெச்சிட்டு காலை இப்படி தட்டு காலை இப்படி ஆட்டு கையை இப்படி பண்ணு என்று என் வயித்துல கையை வெச்சு பிடிச்சிக்கிட்டு அவர் எனக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்தார். அப்புறம் திடீர்ன்னு கையை எடுத்துடுவார். பிறகு கையை வெச்சு பிடுச்சுக்குவார். இப்படியே பண்ணிட்டு இருப்பார்.
அப்புறம் நீ நல்லா நீச்சல் அடிக்கறேன்னு சொல்லி என்னை வெளியில் கூட்டீட்டு வந்துட்டார். அப்புறம் பலாப்பழ சுளையை தேனில் நனைத்து எனக்கு ஊட்டி விடுவார் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆருடன் ஆனந்தஜோதி என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் எம்ஜிஆர் டிரில் மாஸ்டராகவும் கமல் மாணவராகவும் இருப்பார். படத்தில் நாயகியின் தம்பிதான் கமல் என்பதும் குறிப்பிடத்தக்கது.





