தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் வி கே ராமசாமி. எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நடித்த காலகட்டத்தில் அவர்களுடன் பல படங்களில் நடித்தவர். காமெடி குணச்சித்திர வேடங்களிலும் சிறந்த நடிப்பை வழங்கியவர். ரஜினி கமல் பிரபு என முன்னணி நடிகர்களுடன் கல்யாண ராமன் அக்னி நட்சத்திரம் ஆண்பாவம் வேலைக்காரன் அருணாச்சலம் அரங்கேற்றவேளை என பல படங்களில் விகே ராமசாமி நடித்திருக்கிறார்.
நடிகர் விகே ராமசாமி நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்தவர். அதனால் அவர் பலத்த நஷ்டங்களை சந்தித்தார். எம்ஜிஆருடன் பல படங்களில் விகே ராமசாமி நடித்த நிலையில், அவர் பலத்த கடன்களில் சிக்கியிருந்த தகவல் எம்ஜிஆருக்கும் தெரிய வந்துள்ளது. ஒருமுறை விகே ராமசாமியிடம் இதுபற்றி எம்ஜிஆரே நேரடியாக கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் விகே ராமசாமி கூறியிருப்பதாவது, நீங்க ஆயிரக்கணக்கான படத்துல நடிச்சிருக்கீங்க, 10 15 படமும் சொந்தமாகவும் தயாரிச்சிட்டீங்க. இப்படி இருந்தும் நீங்க கடனாளியாக இருக்கறதா ஊருக்குள்ள பேசிக்கறாங்களே? அது உண்மையா என்று ஒருமுறை எம்ஜிஆர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்.
ஆமாங்க அது உண்மைதான் வாஸ்தவம்தான் என்றேன். என்ன காரணம் என்றார். அது நிர்வாக கோளாறுகள்தான் காரணம் என்றேன். நான் தயாரிக்கிற படங்களை நான் சரியாக கவனிக்கிறது இல்லை. நான் அப்பப்போ நடிக்கிறதுக்கு போயிடுவேன். இப்படியே நிறைய போயிடுச்சுங்க என்று சொன்னேன்.
அப்ப ஒண்ணு செய்ங்க. என்ன வெச்சு ஒரு படம் எடுத்து உங்க கடனை எல்லாம் அடைச்சிடுங்க கொஞ்சம் நிம்மதியா இருங்க என்று என்னிடம் எம்ஜிஆர் சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியமா போச்சு. ஏன்னா இவரை நடிக்க வைக்கிறதுக்காக எத்தனையோ தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுக்காக அலையும் போது நமக்கு அண்ணன் வந்து இப்படி ஒரு சமாச்சாரத்தை சொல்லி இருக்காரே? நாம ஏற்கனவே படம் எடுத்து நிர்வாக கோளாறினால் தானே இவ்வளவு நஷ்டம்? இவர் சொல்லிட்டாரே சரியாக இதை நிறைவேத்தணுமே என்கிற எண்ணம் வந்தது.
அதனால் நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேண்ணே என்று எம்ஜிஆரிடம் சொன்னேன். என்ன யோசிக்கறீங்க என்றார். என்கிட்ட நிர்வாகம் ஒன்றும் சரியாக இல்லே என்றேன். அதற்கு அவர் நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். பத்திரிகையில் ஒரு விளம்பரம் மாத்திரம் கொடுங்க. மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னார். சரிங்கண்ணே அதன்படி செய்யலாம் என்று சொல்லிவிட்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் விகே ராமசாமி கூறியிருக்கிறார்.





