ஜெயம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. சில மாதங்களுக்கு முன்புதான் தனது ஜெயம் ரவி என்கிற பெயரை ரவிமோகன் என்று மாற்றிக்கொண்டார். இதற்கு முக்கிய காரணம் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்து விட்டன.
குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இறைவன் அகிலன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என பல படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கிடையே தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். இப்போது அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமான நட்பில் இருந்து வரும் நடிகர் ரவிமோகன், சென்னையில் வசிக்காமல் மும்பையில் தனியாக ஒரு வாடகை அபார்ட்மென்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாடகி கெனிஷாவுடன் திருப்பதி கோவில் சினிமா நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருவதும் இணையத்தில் அடிக்கடி வைரலாகிறது.
சமீபத்தில் ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடிகர் ரவிமோகன் ஆரம்பித்துள்ளார். இதில் அவரும் எஸ்ஜே சூர்யாவும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை ரவிமோகனே தயாரிக்கிறார். ரவி மோகன் இயக்கும் ஒரு படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தையும் ரவி மோகனே தனது நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வரும் ரவி மோகன் தயாரிப்பாளர் இயக்குனர் வில்லன் ஹீரோ என பல அவதாரங்களை எடுத்துள்ள நிலையில், படங்களில் நடிக்கவும் தீவிரம் காட்டுகிறார். அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருகிறார். இதற்கிடையே மிருதன் 2 படம் உருவாகும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் வெளிவந்த படம் மிருதன். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ஜெயம் ரவி லட்சுமிமேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்திருந்தார். திகில் காட்சிகள் நிறைந்த திரில்லர் படமாக இது வெற்றி பெற்றது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படமாகும். இப்போது மிருதன் 2 படம் உருவாக ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் துவங்கியுள்ளன.





