மலையாள சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே பரிச்சயமானவர் நடிகர் மோகன்லால். இங்கு எப்படி ரஜினி கமல்ஹாசன் என மூத்த நடிகர்கள் இருக்கிறார்களோ அதே போல மலையாளத் திரை உலகின் நட்சத்திரமாக விளங்கி வருகிறார் மோகன் லால். தமிழ் சினிமாவிலும் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் மிகக் குறிப்பாக நாம் இருவர் திரைப்படத்தை கூறலாம். மணிரத்னம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில், தனது திறமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்திருப்பார் மோகன்லால். இதே போல சிறைச்சாலை திரைப்படத்திலும் மோகன்லால் நடித்திருப்பார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர் முக்கியமான நடிகராக மாறினார்.
கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திலும், மோகன்லாலுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, விஜயுடன் அவர் இணைந்து நடித்த ஜில்லா திரைப்படம் தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்டது. அதில் விஜய்க்கு தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவை தாண்டி மலையாளத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
கமர்சியல் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், மோகன்லாலின் நடிப்பு பாராட்டை பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்திருப்பார் மோகன்லால். கிளைமாக்ஸில் அவர் வரும் காட்சிகள் திரையரங்குகளில் விசில் பறக்க வைத்தன.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்படி இருக்க, மோகன்லால் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் 47வது திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதேபோல், சிவகார்த்திகேயன் மீண்டும் டான் பட இயக்குனர் சிபின் சக்கரவர்த்தியிடம் பணி புரிய இருக்கும் நிலையில், அதில் எஸ் கே விற்கு தந்தையாக மோகன்லால் நடிக்க இருப்பதாக பேசுகிறார்கள். அஜித்தின் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதிலும் மோகன் லாலுக்கு ஒரு முக்கிய ரோல் இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





