மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் சிறந்த கலைஞராக தன்னை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். சமீபகாலமாக அவர் சிறந்த படல்களை தயாரிக்கவும் செய்கிறார். மத்திய அரசு நடிகர் மோகன்லாலுக்கு தாதே சாகிப் பால்கே விருதை இன்று அறிவித்துள்ளது.
மலையாளத்தில் சக நடிகர் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சினிமாவில் சக நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சகோதரனாக நண்பனாக பல ஆண்டுகளாக சினிமாவை சுவாசமாக கொண்டுள்ள ஒரு கலைஞன். உங்களுக்கு தாதே சாகிப் பால்கே விருது என்பது இவர் நடிகர் என்பதற்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை.
சினிமாவை உண்மையாகவே தனது மூச்சை போல கருதும் ஒரு கலைஞனுக்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அந்த கிரீடத்திற்கு லால் நீங்கள் உண்மையிலேயே தகுதியானவர்தான் என்று நடிகர் மம்முட்டி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் மம்முட்டி மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மோகன்லால் நடிப்பில் சிறந்து விளங்குவதற்கும் சகலகலா வல்லவன் என்பதற்கும் வாழும் எடுத்துக்காட்டு. பல சதாப்தங்களாக தனது சிறந்த படங்களுடன் மலையாள சினிமா, நாடகத்துறையில் முன்னணியில் இருப்பவர். கேரளா கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
மலையாள மட்டும் இல்லாமல் தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல்வேறு தளங்களில் அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தாதே சாகிப் பால்கே விருது பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கட்டும் என்று பிரதமர் மோடி பதிவிட்டு வாழ்த்தி உள்ளார்.
கடந்த 1978ம் ஆண்டில் நடிகர் மோகன்லாலின் சினிமா வாழ்க்கை தொடங்கியது. அவர் நடிகராக 300க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். மலையாள சினிமாவில் ஒரு சாதனையாளர். தமிழ் தெலுங்கு இந்தி படங்களிலும் மோகன்லால் நடித்திருக்கிறார். தமிழில் இருவர் ஜில்லா உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது 4 முறை பெற்றவர். கேரள அரசின் சிறந்த நடிகர் விருது 9 முறை பெற்றவர். 2019ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் 2010 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி சிறந்த குடிமகன் விருதும் மோகன்லால் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





