தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளை தரும் இயக்குநர்கள் சொற்பமாகவே காணப்படுகின்றனர். கமர்ஷியல் ஹிட் தந்து, கோடிக்கணக்கில் சம்பாதிக்க வரும் நடிகர்களும், இயக்குநர்களும் கலை சார்ந்த படைப்புகளை தர யோசிப்பது கூட இல்லை. ரஜினி போன்ற பெரிய நடிகர்களே, எனக்கு அவார்டு வேண்டாம், ரிவார்டு தான் முக்கியம் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
ஏனெனில் சினிமா, மக்கள் விரும்பும் ஊடக சாதனமாக இருப்பதால் அதை தங்களது வளர்ச்சிக்கான கருவியாக பயன்படுத்திக் கொள்ளவே லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி போன்ற இயக்குநர்கள் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் சினிமா மூலம் மக்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளை தர வேண்டும். அந்த கலைப்படைப்பின் வழியாக சமுதாயம் சார்ந்த பல நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்புகிற சில படைப்பாளி இயக்குநர்களும் காணப்படுகின்றனர். சமுத்திரக்கனி, சசிக்குமார், வெற்றிமாறன், அமீர் போன்றவர்களை அந்த வரிசையில் சொல்லலாம்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் காக்கா முட்டை என்ற யதார்த்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பேசப்பட்டவர் இயக்குநர் மணிகண்டன். இந்த படத்துக்காக தேசிய விருது பெற்றார். இதைத்தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, விவசாயி போன்ற படங்களை தந்திருக்கிறார். இந்த படங்கள் அனைத்துமே, ரசிகர்கள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படங்கள்தான்.
குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கடைசி விவசாயி படம் பெரிய அளவில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் விஜய் சேதுபதி கேமியோ ரோல் செய்திருந்தார். நல்லாண்டி என்ற முதியவர் மிகச்சிறப்பான, யதார்த்தமான ஒரு நடிப்பை வழங்கியிருந்தார். இந்த படமும் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் மணிகண்டனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டி ஆகும். உசிலம்பட்டி எழில் நகரில் இயக்குநர் மணிகண்டனின் சொந்த வீடு, அலுவலகமும் உள்ளது. குடும்பத்துடன் மணிகண்டன் சென்னை வந்த நிலையில், அவரது வீட்டு கதவை உடைத்த புகுந்த மர்ம நபர்கள், மத்திய அரசின் தேசிய விருதுக்கான 2 வெள்ளி பதக்கங்கள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம். 5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





