நயன்தாரா தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். டெஸ்ட் என்னும் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்து இருக்கிறார். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. விக்கி என்பவர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோக இளம் நடிகர் கவின் உடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் விஷ்ணு எடவன்தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படி அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க தயாராகி வருகிறார்.
இதன் முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்தார். தனது நண்பர் சரவணகுமார் உடன் இணைந்து அவர் பணியாற்றி இருந்தார். நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு பெற்றது. படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது. வேல்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தது.
இப்படியான சூழலில் தான் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முறை ஆர்.ஜே பாலாஜியை அந்த நிறுவனம் இயக்குனராக அறிவிக்கவில்லை. அவரும் இதைக் கண்டு கொள்ளாமல், சூர்யாவை வைத்து அவரது 45ஆவது திரைப்படத்தை இயக்க சென்று விட்டார்.
இப்படியான சூழலில் தான் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வந்திருக்கிறார் சுந்தர் சி. இதற்கான பணிகளை அவர் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கான பட்ஜெட் மட்டும் 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களாம். நயன்தாரா திரைப்படத்திற்கு இந்த தொகை மிகவும் அதிகம் என்றும், ஒருவேளை படம் மிக அருமையாக இருந்தால் இந்த தொகையை வசூல் செய்யலாம் என்றும் சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.





