நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. தற்போது இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தரப்பில் மாதம் தோறும் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆர்த்தியின் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், மாதம் 3 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நடிகர் ரவிமோகனுக்கு உத்தரவிட்டது. அவரது மகன்கள் ஆரவ் மற்றும் அயானை எந்தவித தடையும் இன்றி அவர் சந்திக்கலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்த்தியின் அம்மா அதாவது ரவிமோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ரவி மோகனிடம் 40 லட்சம் ரூபாய் மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்கு தருமாறு நாங்கள் கேட்கவில்லை. அந்த பணம் எல்லோருக்கும் பெரிய விஷயம். எனினும் எங்கள் தலையில் ரவிமோகன் கட்டி வச்சிட்டு போன கடன் இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எந்தவித சலுகையும் அவர் தரப்பில் செய்யவில்லை. அவர்களின் உணவு செலவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பள்ளி கட்டணம் பிள்ளைகளுக்கு பெற்றவர் செய்ய வேண்டிய கடமையாகும்.
ரவிமோகன் விட்டுச் சென்ற கடனால் வீடு ஜப்திக்கு வந்தது போன்றவை எல்லாம் எந்த பெற்றோரும் பார்க்க கூடாத ஒன்றாகும். இரண்டு பசங்களும் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் ஆண்டுக்கு பள்ளி கட்டணம் மட்டுமே 86 லட்சம் ரூபாய் வருகிறது. அதை அவரது அப்பா ரவிமோகன் தான் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இரண்டு ஆண்டுகளாக தனது பிள்ளைகளை ஆர்த்தியை அவர் சந்திக்கவில்லை. இப்போது மாதம் ஒருமுறை சனி ஞாயிறு தினங்களில் சந்திக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இனியாவது இந்த பிரச்சனை சரியாக வேண்டும். எந்த தாயும் பிள்ளைகள் வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. பத்தாயிரம் பேரை கூப்பிட்டு திருமண விழாவை நடத்தினோம் என்று சுஜாதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.





