இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிகை மமீதா பைஜூ ராதிகா சரத்குமார் பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடித்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது.
அப்போது விழாவில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, சூர்யாவுக்கு மனப்போராட்டங்கள் அதிகம். அதை நான் பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். அது வெளியே தெரியாது. அதற்கு கிடைத்த வெற்றியாக இந்த படத்தை பார்க்கிறேன். ஆரம்பத்தில் இப்படி நடி அப்படி நடி என அவருக்கு நான் நிறைய அட்வைஸ் கொடுத்திருக்கிறேன்.
இப்போது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் ரசித்த குடும்ப படம் சூரியவம்சம். அதற்கு பின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை போல் சூர்யாவும் வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு அழகாக இருக்கிறார். நானும் சரத்குமாரும் இந்த படத்தை பார்த்து ரசித்தோம். அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.
படம் பார்த்துவிட்டு அண்ணன் சிவக்குமாரும் நீண்ட நேரம் பேசினார். நான் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகளாக போகிறது. வெற்றி தோல்வி அனைத்தையும் பார்த்து விட்டேன். இப்படிப்பட்ட படங்களின் வெற்றி சந்தோஷத்தை கொடுக்கிறது.
இந்த கதையில் கொஞ்சம் வேறு மாதிரி நடித்தால் வேறு மாதிரி சிரித்தால் தப்பாகிவிடும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா. என் கணவர் சரத்குமார் நடித்த டியூட் படப்பிடிப்பில் மமீதா பைஜூவை பார்த்தேன். அவர் அதிகம் பேசவில்லை. இந்த பொண்ணு சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சரத்குமார் சொன்னார். அதை அந்தப் படத்தில் பார்த்தேன்.
இப்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இன்னும் அதிகம் பார்த்தேன். மமீதாவை செல்லமாக மம்மி என்று அழைப்பேன். ஜீவி பிரகாஷ் படம் பார்த்துவிட்டு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பாராட்டினார் என்று நடிகை ராதிகா சரத்குமார் இந்த விழாவில் பேசியிருக்கிறார். இந்த விழாவில் படத்தின் நாயகன் சூர்யா தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஏனோ பங்கேற்கவில்லை.





