தமிழ் சினிமாவில் இசை ஆளுமை மிக்கவராக இப்போதும் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய அவரது தமிழ் சினிமா இசை பயணம் இப்போது 50 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரம் பாடல்கள், 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். சிம்பொனி இசைக்கு சொந்தக்காரர். மேஸ்ட்ரோ என கொண்டாடப்படுபவர் இளையராஜா.
இந்த ஆண்டில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், இளையராஜா என்ற அவரது வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிக்க இருப்பது நடிகர் தனுஷ்தான். கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், 1990களில் தமிழ் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக வந்தவர் தேவா. தேனிசை தென்றல் தேவா என பிறகு அழைக்கப்பட்டார். வைகாசி பொறந்தாச்சு துவங்கி அடுத்து ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் கார்த்திக் அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் தேவா இசையில் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.
ஒரே ஆண்டில் 36 படங்களுக்கு இசையமைத்த பெருமை தேவாவுக்கு உண்டு. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக தேவா வலம் வந்தவர். அவரது பல படங்களில் இடம்பெற்ற பாடல்கள், இளையராஜா இசையில் உருவானது என்று ரசிகர்கள் கருதும் அளவுக்கு, இளையராஜா மாதிரியே அவருக்கு இணையாக படங்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டவர் தேவா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற தேவாவிடம், இளையராஜா உச்சத்தில் இருந்த போது சினிமாவுக்குள் நீங்கள் இசையமைப்பாளராக வருகிறீர்கள். இளையராஜா மீது உங்களுக்கு பயம் இருந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தேவா, அப்படி யாரும் பயமுறுத்தி இருந்தால் கூட நான் பயப்பட மாட்டேன்.
அவர் இருக்கார் இவர் இருக்காருன்னு நாம பயந்தால், நம்மை எப்படி இந்த உலகம் தெரிந்துக்கொள்ள முடியும். அதனால் அப்படி நான் நினைக்கவில்லை. அதை விட பெஸ்ட்டாக நன்றாக இசை தருவோம் என்றுதான் தோன்றியது. அந்த மனோதைரியம் எனக்கு நிறைய இருந்தது. அதனால் தான் இப்போ இசையமைப்பாளராக இருக்கிறேன், என்று அந்த நேர்காணலில் தேவா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





