வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “வட சென்னை” திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை உண்டு செய்தது. மிகவும் யதார்த்தமான ஒரு கேங்கஸ்டர் திரைப்படத்தை அட்டகாசமான திரைக்கதையுடன் உருவாக்கியிருந்தார் வெற்றிமாறன். இதில் தனுஷ், இயக்குனர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு பக்கம் இத்திரைப்படத்தில் சென்சாரே செய்யப்படாமல் பல கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததால் பல விமர்சனங்களும் வந்தது. எனினும் இத்திரைப்படத்தின் யதார்த்த தன்மைக்கு அது மிகவும் பொருந்திப்போனதாக பலர் கூறினார்கள்.
“வட சென்னை” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் “வட சென்னை பார்ட் 2” அதாவது “அன்புவின் எழுச்சி” வெளிவரும் என்ற அறிவிப்போடுதான் அத்திரைப்படத்தை முடித்திருந்தார்கள். ஆதலால் “வட சென்னை பார்ட் 2” திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

“வட சென்னை” திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் “வட சென்னை பார்ட் 2” குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. “வட சென்னை” திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் “அசுரன்”, “விடுதலை பாகம் 1” போன்ற திரைப்படங்களை இயக்கிவிட்டார். தற்போது “விடுதலை பாகம் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பல வருடங்கள் ஆகியும் வெற்றிமாறன், “வட சென்னை 2” குறித்த அப்டேட்டை வெளியிடவில்லை என்பதால் வெற்றிமாறன் கலந்துகொள்ளும் விழாக்களில் எல்லாம் ரசிகர்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே வருகின்றனர். சமீபத்தில் கூட “வாத்தி” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “வட சென்னை 2” குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ், “வட சென்னை 2 நிச்சயம் வரும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “வட சென்னை திரைப்படத்தில் அமீர் ஏற்று நடித்த ராஜன் கதாப்பாத்திரத்தை மட்டும் வைத்து ‘ராஜன் வகையறா’ என்ற திரைப்படத்தை வெற்றிமாறன் தயாராக வைத்திருக்கிறார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் அந்த படத்தை அவர் ரிலீஸ் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.





