மெதுவாக இருந்தாலும் சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் திரைக்கதை, கதாபாத்திரங்களின் காலில் இருந்து ஒரு விஷயத்தை விளக்கும் கேமரா காட்சியின் கோணம், கத்தி முனையில் எழுதப்படும் கூர்மையான வசனம் என தனக்கே உண்டான பாணியை ஒவ்வொரு படத்திலும் நிரூபிப்பதால் இங்கு மிஷ்கினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் அவரது திரையுலக பயணம் தமிழ் சினிமாவில் ஆரம்பித்தது. அதில் இடம்பெற்ற வாலை மீனுக்கும் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, அதன் பிறகு தான் இப்படி ஒரு திரைப்படம் வெளியாகி இருப்பதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
அதன்பிறகு சித்திரம் பேசுதடியை திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் பார்க்க, படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. இந்த சூழலில் தான் அஞ்சாதே திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் மிஷ்கின். உண்மையில் சொல்லப்போனால் கோலிவுட்டில் இதுவரை எடுக்கப்படாத புதிய கோணத்தில் காட்சி அமைப்புகளை ரசிகர்களுக்கு காட்டினார் மிஷ்கின்.
அஞ்சாதேவுக்கு பிறகு அவர் நடித்த நந்தலாலா, முகமூடி ஆகிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை. பிறகு, யுத்தம் செய் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என இரண்டு திரைப்படங்கள் மூலம் மீண்டு வந்தார் இயக்குனர். இதனைத் தொடர்ந்து விஷாலுடன் அவர் இணைந்து எடுத்த துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
பின்னர் பிசாசு சைக்கோ என தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாகவே மிஸ்கின் தொடர்ந்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது இயக்கத்தில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இடையில் நடிப்பில் வேறு அவர் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் எடுக்கப்பட்டு இன்னும் பெட்டிக்குள்ளேயே இருக்கிறது.
இந்த படத்திற்குப் பிறகு அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரயில் எனும் திரைப்படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் தொடராக இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில் திரைப்படத்தின் சூட்டிங் தற்போது முடிவிருக்கிறதாம். அதற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டில் ரயில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நாசர் வினய் கேஎஸ் ரவிக்குமார் உட்பட ஏராளமானவர் நடித்திருக்கிறார்கள்.





