தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு சொந்தமான வீடு சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ளது. இங்கு வீட்டு பாதுகாவலர்கள் உள்ளனர். இதுதவிர ஒய் பிளஸ் பாதுகாப்பும் நடிகர் விஜய்க்கு தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு நடிகர் விஜய் தனது வீட்டில் உள்ள மொட்டை மாடிக்கு வாக்கிங் செல்வதற்காக சென்றார். அப்போது அங்கு மறைவான இடத்தில் ஒளிந்திருந்த ஒரு வாலிபர், திடீரென விஜயை நோக்கி ஓடி வந்திருக்கிறார். விஜயை கட்டிப்பிடிக்க முயற்சித்திருக்கிறார்.
அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் பிறகு அவரிடம் பக்குவமாக பேசி வீட்டின் கீழ்பகுதிக்கு அழைத்து வந்திருக்கிறார். பிறகு அங்கிருந்த தனது பாதுகாவலர்களிடம் அவரை ஒப்படைத்திருக்கிறார். அவரது பேச்சும் நடவடிக்கையும் வித்யாசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்குமாறும் கூறியிருக்கிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் விஜய் வீட்டில் பதுங்கியிருந்த நபர் பெயர் அருண் என்றும் அவருக்கு 24 வயது என்பதும் தெரிய வந்தது. மதுராந்தகத்தை சேர்ந்த அவர் வேளச்சேரியில் உள்ள அவரது சித்தி வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, விஜய் வீட்டின் பின்பகுதியில் உள்ள அவசர வழி வழியாக வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
அவசர வழி பகுதியில் செக்யூரிட்டி இல்லாத நேரத்தில் நுழைந்த அவர் நேரடியாக மொட்டை மாடிக்கு சென்று நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் முழுவதும் அங்கேயே ஒளிந்து அமர்ந்திருக்கிறார். உணவு குடிநீர் என எதுவும் இன்றி ஒரு இரவு ஒரு பகல் இருந்த அவர், நேற்றிரவு மொட்டை மாடிக்கு வாக்கிங் சென்ற விஜயை பார்த்தவுடன் ஓடிவந்து அவரிடம் பேசியிருக்கிறார்.
இவ்வளவு பாதுகாவலர்கள், ஒய் பிரிவு பாதுகாப்பு இருந்தும் விஜய் வீட்டுக்குள் நுழைந்த அந்நிய நபர் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் இருந்தது பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இதையடுத்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தளபதி ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.





