இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் அறிமுகமாகினர். அதில் ஒருவர்தான் நடிகர் பரத். இந்த படத்தில் பெரிய கவனத்தை பரத் பெறவில்லை என்றாலும், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படம் பரத்துக்கு பெரிய வரவேற்பை, கவனத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.
மதுரையில் பணக்கார வீட்டு பெண் ஐஸ்வர்யா( சந்தியா)வை காதலிக்கும் மெக்கானிக் முருகன் கேரக்டரில் பரத் வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் பரத்தின் இயல்பான நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் அதற்கு பின் அவர் நடித்த பல படங்கள் ஏனோ அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்க வில்லை. வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மட்டுமே வரவேற்பை பெற்றது.
குறிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேபாளி பழனி சேவல் பிப்ரவரி 14 தம்பிக்கு இந்த ஊரு சென்னை காதல் கூடல் நகர் ஆறுமுகம் கண்டேன் காதலை உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. இதில் விஷாலுடன் செல்லமே என்ற படத்திலும், வானம் படத்தில் சிம்பு படத்திலும் நடித்திருந்தார்.
கடைசியாக ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில், எஸ்ஜே சூர்யா பிரதான வில்லனாக நடித்திருக்க, அவரது தம்பியாக பரத் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். பரத் நடித்த படங்களில் மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம் மகன், முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படங்கள் அதிக வரவேற்பை பெற்றன. இதில் வடிவேலு காமெடியும் படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது.
நடிகர் விஜய் துவக்கத்தில் இளைய தளபதி என அழைக்கப்பட்டார். இப்போது தளபதி என்று அழைக்கப்பட்டு வருகிறார். அதே போல் நடிகர் பரத் சின்ன தளபதி என அழைக்கப்பட்டவர். ஆனால் சரியான பட வாய்ப்புகளும், நல்ல கேரக்டர்களும் அமையாததால் அவரால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை இன்னும் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் பரத் கூறியதாவது, கடந்த 15 ஆண்டுகளில் சினிமா ரொம்பவும் மாறிவிட்டது. அந்த காலத்தில் ஆக்சன், காமெடி, ரொமாண்டிக் இருந்தாலே போதும். படம் ஹிட் ஆகிவிடும். ஆனால் இப்போது நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் மட்டுமே படம் ஓடுகிறது. ரசிகர்கள் நல்ல கதை இருந்தால் மட்டும் படங்களை பார்க்கின்றனர். மக்கள் ரொம்பவும் தெளிவாக மாறிவிட்டார்கள், என்று பரத் கூறியிருக்கிறார்.





