அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினிகாந்த், அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு கொரோனா சமயத்தில் பின்வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் முழுக்க முழுக்க நடிப்பின் மேலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு கோடி கோடியாக வசூல் குவித்தது.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ஆனால் அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினிகாந்த் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கல்வித்துறையில் நடைபெறும் மோசடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் சுறுசுறுப்பாக கூலி படத்தில் பணியாற்றி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்ட படபிடிப்பிற்காக, படக்குழுவினர் விசாகப்பட்டினத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தங்கம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுபோக, கன்னட நடிகர் உபேந்திராவும் படத்தில் இருக்கிறார். இதுவெல்லாம் தகவலாகவே இருந்த சூழலில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்த சௌபின் ஷபிர் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சைமன் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் எப்படி சிவராஜ்குமார் மோகன்லால் என பிற மொழி நடிகர்கள் நடித்தார்களோ, வேட்டையன் படத்திலும் அதே பார்முலாவை தான் பின்பற்றினார்கள். தற்போது இது கூலியிலும் தொடர்வதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





