கோலிவுட்டில் ஒரு பெரிய நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகும் போது, அதனுடன் சிறிய படங்கள் எதுவும் வெளியாவதில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கூறலாம். ஒன்று அதற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பது. இன்னொன்று அந்த சிறிய திரைப்படம் நன்றாக இருந்தாலும் வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிற தயாரிப்பாளரின் முடிவு.
இதன் காரணமாக முக்கியமான நாட்களில் முடங்கி கிடக்கும் சிறு பட்ஜெட் திரைப்படங்கள், தேதி கிடைக்கும்போது மொத்தமாக ஒரே நாட்களில் களத்தில் இறங்கும். அதேபோல் தான் தற்போதைய நிலையும் உருவாகி இருக்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை அதாவது 20 ஆம் தேதி, கிட்டத்தட்ட ஐந்து தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. ஏற்கனவே விஜய்யின் கோட் திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வரும் நிலையில், இந்த படங்களுக்கு தற்போது ஓரளவிற்கு காட்சிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
நாளை ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படங்களில் நாம் முதலில் பார்க்கப் போவது லப்பர் பந்து. தமிழரசன் பச்சை முத்து இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து அதில் எமோஷனை கலந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த திரைப்படம், பிரஸ் ஷோவில் வெளியிடப்பட்டு நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் சசிகுமார் நடிப்பில் நந்தன் திரைப்படமும் நாளை வெளியாகிறது. இரா சரவணன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் ஓரளவு பேசப்பட்டதால், படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசி உலகப் போர் திரைப்படமும் நாளை தான் வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் கிராபிக்ஸ் உயிரோட்டமாக எடுக்கப்பட்டிருப்பது இதன் முன்னோட்டத்தை பார்க்கும் போதே தெரிந்ததாக ரசிகர்கள் கூறியிருந்தனர். இதே போல் நகைச்சுவை நாயனாக இருந்து கதாநாயகனாக மாற முயன்று வரும் சதீஷ், சட்டம் என் கையில் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதுவும் செப்டம்பர் 20 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இதேபோல் சீனு ராமசாமி இயக்கி இருக்கும் கோழி பண்ணை செல்லத்துரை திரைப்படம் நாளை தான் வெளியாகிறது.




