தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக இருந்தவர் ஜானி மாஸ்டர். நடிகர் தனுஷ் நித்யாமேனன் நடித்த திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா கண்ணே கண்ணே என்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்ததற்காக நடன இயக்குனர்கள் ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு 2022ம் ஆண்டுக்கான 70 வது தேசிய விருதுகளின் சிறந்த நடன இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜானி மாஸ்டரிடம் நடன உதவியாளராக பணிபுரிந்த பெண் ஒருவர், ஜானி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அவர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மைனர் பெண்ணாக இருந்த போதே தன்னை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.
அதனால் 3 பிரிவுகளில் ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஜானி மாஸ்டரை கைது செய்தனர். போலீசாருக்கு தெரியாமல் கோவாவில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட ஜானி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய விருது பெறுவதற்காக நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதனால் அவருக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். வருகிற 8ம் தேதி டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் இடைக்கால ஜாமீன் பெற்று தேசிய விருது வாங்கப் போவது பலத்த சர்ச்சையை கிளப்பியது. பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அவர் தேசிய விருது பெறுவது, தேசிய விருதுகளின் பெருமையை குலைப்பதாக உள்ளது என்று பலரும் விமர்ச்சித்தனர். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஜானி மாஸ்டருக்கு வழங்கப்படுவதாக இருந்த தேசிய விருதை மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்வதாக தேசிய திரைப்பட விருதுகள் குழுமம் தற்போது அறிவித்துள்ளது. டெல்லியில் வருகிற 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு ஜானிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெறுவதாகவும் விருதுகள் குழு குறிப்பிட்டுள்ளது. அதற்கான கடிதம் சிறையில் உள்ள ஜானிக்கு சிறைக் கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய விருது வாங்குவதற்காக ஜானிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படவும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.





