தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக திரையரங்கில் வெளியான அவரது தமிழ் படம் அன்னபூரணி. இது அவரது 75வது படமாக இருந்தது. பெரிய வரவேற்பை பெறும், வெற்றியை பெறும் என எதிர்பார்த்த அன்னபூரணி மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தது.
இதையடுத்து சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸான படம் டெஸ்ட் நயன்தாரா மற்றும் மாதவன் சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்த டெஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு ரூ. 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இப்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா அபிநயா இனியா கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 120 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 உருவாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கில் நடிக்கும் மெகா 157 என்ற படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இந்த படத்திலும் நாயகியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 15 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் 6 கோடி ரூபாயாக தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டு இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
இதற்கிடையே கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் 18ம் தேதி நயன்தாரா நடிக்கும் புதிய படம் ராக்காயி என்று டைட்டில் டீசர் வெளியானது. அறிமுக இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் 6 மாதங்களாகியும் இன்னும் ராக்காயி படப்பிடிப்புக்கான கால்ஷீட் தராமல் நடிகை நயன்தாரா அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்தடித்து வருகிறார்.
மூக்குத்தி அம்மன் 2 மற்றும் சிரஞ்சீவி படங்களில் நடிப்பதால் இந்த ஆண்டில் ராக்காயி படத்துக்கு தேதி தர முடியாது. 2026ம் ஆண்டில் பார்க்கலாம் என்று நயன்தாரா தரப்பில் அலட்சியமாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நயன்தாரா நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதுபோல் ராக்காயி படமும் சொதப்பி விட்டால் இப்போது கமிட் ஆன மூக்குத்தி அம்மன் 2, சிரஞ்சீவி படங்களுக்கு சிக்கல் வந்துவிடுமே என நயன்தாரா தரப்பு அச்சப்படுவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.





