கடந்தாண்டில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம் பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடி வசூலை கடந்த முதல் படமாக கடந்தாண்டில் ரசிகர்களின் மத்தியில் மாபெம் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜ ராஜா படமும் ரூ. 50 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் கேரண்டியாக இயக்குனராக சுந்தர் சி இருப்பதால் அவரை மலை போல் நம்பி, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ஐவி எண்டர்டெயின்மென்ட் அவ்னி சினிமேக்ஸ் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தில் நாயகியாக அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் சுந்தர் சி துனியா விஜய் யோகிபாபு ரெஜினா கசாண்ட்ரா அபிநயா இனியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கடந்த 6ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு துவக்க விழா பட பூஜை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரவி மோகன் மீனா குஷ்பு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையை தொடர்ந்து பொள்ளாச்சியில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது காஸ்ட்யூம் குறித்து படத்தின் உதவி இயக்குனரை நடிகை நயன்தாரா கண்டபடி திட்டியிருக்கிறார். அவரை மிகவும் மரியாதைக்குறைவாக பேசி அடாவடியாக நடந்திருக்கிறார். இது இயக்குனர் சுந்தர் சிக்கு தெரிய வந்ததால் பயங்கர அப்செட் ஆகியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலேயே நயன்தாரா இப்படி பிரச்னை செய்வதால் டென்சன் ஆன சுந்தர் சி, இனி நயன்தாரா இந்த படத்தில் அம்மன் கேரக்டரில் நடிக்க வேண்டாம். அவருக்கு பதிலாக நடிகை தமன்னாவை நடிக்க வைக்கலாம். ஏற்கனவே நயன்தாரா சம்பளம் ரூ. 5 கோடி வாங்கிவிட்டு படத்தின் லாபத்திலும் பங்கு கேட்டிருப்பதால் அவரை படத்தில் இருந்து விலக்கி விடலாம் என்ற அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தால் பொள்ளாச்சியில் நடக்க இருந்த படத்தின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷூட்டிங்கை ரத்து செய்யுமாறு சுந்தர் சியே கூறியும் இருக்கிறார். ஆனால் இந்த பிரச்னையில் நடிகை நயன்தாரா, சுந்தர் சி இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசி சமாதானப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து சென்னை ஆலம்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





