சின்னத்திரையில் அது இது எது எனும் நிகழ்ச்சியை இயக்கி வந்தவர் இயக்குனர் நெல்சன். சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பிற்காலத்தில் வெள்ளி திரையில் ஜொலித்தார் சிவகார்த்திகேயன். இதே போல் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் நெல்சனும், வெள்ளித்திரையில் இப்போது முக்கியமான இயக்குனரில் ஒருவராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் எனும் திரைப்படத்தை அவர் இயக்கினார். இதில் ஹன்சிகா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, திடீரென பொருளாதாரப் பிரச்சினையால் நின்று போனது. இதனால் துவண்டு கிடந்த நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார் நயன்தாரா.
அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை நெல்சன் இயக்கினார். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வித்தியாசமான கதைக்களத்தில் இந்த திரைப்படம் எடுத்தது. டார்க் காமெடி ரகம் சரியாக ஒர்க் அவுட் ஆனதால் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு சென்றார்கள். இதன் காரணமாகவே கோலமாவு கோகிலா பெரிய அளவில் பேசப்பட்டது.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாராவுக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இந்த திரைப்படம் கொடுத்தது. இதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை நெல்சன் இயக்கினார். தான் மீண்டும் டார்க் காமெடி வகையிலான படத்தில் கிங் என்பதை நிரூபித்த நெல்சன், இந்த முறை 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் அளவுக்கு சாதனை புரிந்தார். ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை டாக்டர் திரைப்படம் பெற, நெல்சனுக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சனை, விஜய் ரசிகர்கள் கேலி கிண்டல் செய்தனர். இதிலிருந்து மீண்டு வருவதற்காக போராடிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார்.
ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்த இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்த நிலையில் தற்போது நெல்சனின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகாமலே உள்ளது. அவர் தனுஷ் உடன் இணையலாம் என்று பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும், ஜனவரி மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நெல்சன் தெரிவித்துள்ளார். அவர் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





