அல்லு அர்ஜூன் நடிப்பில் வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உள்பட பல ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேசியதாவது, இந்த விழாவுக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன், ரவி சாரை பார்க்கும் போதேல்லாம் நான் பலமுறை கேட்பேன். புஷ்பா 2 எப்போ சார் ரிலீஸ் என்று. இப்படியே 2, 3 வருடங்கள் போய்விட்டது. புஷ்பா படத்தை ஒரு தெலுங்கு படம் என்ற கோணத்தில்தான் நான் முதலில் பார்த்தேன். அப்புறம் படம் பயங்கரமா இருக்குதே என அந்த படத்துடன் கனெக்ட் ஆகிட்டேன்.
அல்லு அர்ஜூனை நேரில் பார்க்கும்போது அவரது ஸ்டைலிஷ், பெர்பாமென்ஸ் குறித்து பாராட்டினேன். அப்போது புஷ்பா படத்துக்கு பிறகு 3 ஆண்டுகளாக வேறு எந்த படமும் அவர் பண்ணவில்லை. சினிமாவில் ரொம்ப பேஷனிஸ்ட் ஆகவும், சினிமாவை லவ் பண்றதாலும் அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை. புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாறனும் அப்படித்தான்.
அதனால் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக புஷ்பா 2 இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனென்றால் அல்லு அர்ஜூன் சினிமாவை அந்த அளவுக்கு காதலிக்கிறார். அந்தளவுக்கு இந்த படத்தில் அவரது கடின உழைப்பும், பங்களிப்பும் இருக்கிறது. அதனால் அந்த படம் வெற்றி பெறும்.
வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதே ஆர்வத்தில் நானும் இருக்கிறேன். இந்த படத்தில் பாடல்களும், டிரெய்லரும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. அந்தளவுக்கு நிச்சயமாக படமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
என்னுடைய இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பாரா என்பது குறித்து அவர்தான் சொல்ல வேண்டும். அவர் ஓகே சொன்னால் எனக்கும் ஓகே தான். ஆனால் அவர் நேரடியான தமிழ் படத்தில் நடிக்க வேண்டும். அவர் தமிழில் நம்மை போல சரளமாக, இயல்பாக பேசுகிறார். அதனால் அவர் தமிழ் மொழியில் பேசி நேரடியான தமிழ் படத்தில் நடிக்க வேண்டும். தமிழ், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் நேரடியாகவே அவர் நடிக்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு கட்டைவிரலை உயர்த்தி காட்டி சிரித்தபடி நடிகர் அல்லு அர்ஜூன் உறுதியளித்தார்.





