நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் ஒரு அசகாய சூரன் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தான் நடிக்கும் கேரக்டருக்காக தன்னை உடல் ரீதியாக அதிகளவில் வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரே நடிகர் சியான் விக்ரம்தான் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி அவர் நடித்த படங்களாக சேது, காசி, ஐ, அந்நியன், இருமுகன் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாக வேண்டிய இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து, ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த சில படங்கள், தானாகவே பின்வாங்கி விட்டன. ஏனெனில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம், பல விருதுகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு நடிப்பில் பல எல்லைகளை கடந்துள்ளார் விக்ரம்.
ஆனால் அதே நாளில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. பிரசாந்த் நடிப்பில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகர். 1990களில் அவருக்கு இருந்த இமேஜூக்கு தொடர்ந்து அவர் சினிமாவில் முழு கவனம் செலுத்தி இருந்தால் இன்று விஜய், அஜீத் அளவுக்கு முன்னணி நடிகராக வளர்ந்திருப்பார்.
ஆனால் காலத்தின் அலங்கோலத்தால் திருமண வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களால் சினிமா இமேஜ் பெரிய அளவில் டேமேஜ் ஆகி, அவரது சினிமா எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. எனினும் 51 வயதிலும் மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை பிரசாந்த் துவங்கி விட்டார். நடிகர் விஜயுடன் தி கோட் படத்தில் நடித்துள்ள பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் படத்தை வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி விட்டது.
நடிகர் விக்ரம், நடிகர் பிரசாந்த் படங்கள், ஆகஸ்ட் 15ம் தேதி மோதுகின்றன. ஆனால் நடிகர் விக்ரம், பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனின் சொந்த சகோதரி மகன் என்பது பலரும் அறியாத விஷயம். அதாவது பிரசாந்துக்கு அத்தை மகன் சியான் விக்ரம், அதே போல் விக்ரமுக்கு சொந்த தாய்மாமா மகன்தான் பிரசாந்த். ஆனால் குடும்ப சண்டை காரணமாக, இவர்கள் உறவு நிஜ வாழ்க்கையில் நிலைக்காமல் போய்விட்டது. எனினும் அத்தை மகன், மாமன் மகன் படங்கள் இந்த முறை சுதந்திர தினத்தன்று அவர்கள் நடித்த படங்களில் மோதுகின்றனர். இதில் வெல்லப் போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.





