தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். 150 படங்களுக்கு மேல் நடித்த அவர் 1980 90களில் தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்த ஒரு முன்னணி நடிகராக இருந்தார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த சங்கத்தின் கடனை அடைத்தார்.
மற்றவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் ஒரு முன் உதாரணமாக இருந்தார். எத்தனையோ புதுமுக இயக்குனர்களுக்கு தனது படங்களை இயக்க வாய்ப்பளித்தார். புதுமுக தயாரிப்பாளர்களை ஊக்குவித்தார். திறமையான பல நடிகர்களுக்கு தனது படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பளித்தார். தேமுதிக என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் சிறந்த முறையில் செயல்பட்டார்.
நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன் என 2 மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமா நடிகராக உள்ளார். சகாப்தம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இப்போது சண்முக பாண்டியன் நடிப்பில் படை தலைவன் என்ற படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் அன்பு இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இசைஞானி இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். யானையை மையப்படுத்திய ஒரு அதிரடி ஆக்சன் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் யானைப்பாகன் கேரக்டரில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இதற்காக இவர் தனது உடல் தோற்றத்தை மாற்றி ஆஜாகுபாகுவான கம்பீரமான உடல் தோற்றத்தில் நடித்திருக்கிறார். யானையை பராமரிப்பது பற்றிய உரிய பயிற்சிகளைப் பெற்று இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்போது பல படங்கள் ரிலீஸ் ஆக இருந்ததால் படை தலைவன் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற மே 23ம் தேதி படை தலைவன் படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. மீண்டும் கேப்டனை திரையில் தரிசிக்க அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.





