தமிழக வனப் பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கேரளம் மாநிலம் மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானை ஒன்று அடிக்கடி உலா வருகிறது. அந்த யானை அவ்வப்போது பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
அங்குள்ள ரோடுகள் தோட்டங்களில் சர்வ சாதாரணமாக நடமாடி வரும் அந்த யானை கடந்த காலங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்களை மிதித்து கொன்றுள்ளது. இதுதவிர ரோடுகளில் வரும் வாகனங்களை விரட்டுவதும் அவற்றை சேதப்படுத்துவதும் என தொடர்ந்து அட்டகாசத்தில் யானை ஈடுபட்டு வருகிறது. இதனால் மூணாறு பகுதி மக்கள் எப்போதும் ஒருவித அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.
அதேபோல் அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் பாதுகாப்புடன் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் சீனிவாச மங்காபுரம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மூணாறு பகுதியில் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை மூணாறு அருகே குண்டலை என்ற பகுதியில் சீனிவாச மங்காபுரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது படத்தின் நாயகன் ஜெயகிருஷ்ணன் கதாநாயகி ரோசா ஆகியோரின் காதல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டு பேரும் காதல் காட்சியில் ஆர்வமாக நடித்துக் கொண்டிருந்தனர். அந்த காட்சியை படப்பிடிப்புக் குழு படமாக்கிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் காட்டு யானை திடீரென படப்பிடிப்பு தளத்துக்குள் அதிரடியாக நுழைந்தது. யானையைப் பார்த்ததும் அங்கிருந்த நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் என அனைவரும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அப்போது அந்த யானை சிலரை துரத்திக் கொண்டு ஓடியது. இருப்பினும் அருகில் இருந்த மன மகிழ் மன்றத்தின் கட்டிடத்திற்குள் சென்று அனைவரும் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மூணாறு வனத்துறையினர் உடனடியாக அங்கு வந்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பிறகு தான் படப்பிடிப்பு குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு நடந்தது சினிமா படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்த அந்த காட்டு யானையின் பெயர் படையப்பா என்பது குறிப்பிடத்தக்கது.





