நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஒன்றரை மாதங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அதே நேரத்தில் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கம் செய்திருப்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட இருக்கிறார். அதனால் நடிகர் விஜய் இடம் இனி தமிழ் சினிமாவில் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நடிகர் சிவகார்த்திகேயன்தான் அடுத்த விஜய் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதை சிவகார்த்திகேயன் மறுத்த போதிலும் விஜய் போன்ற ஒரு செல்வாக்கும் வரவேற்பும் ரசிகர்களிடம் கிடைத்தால் அதை எந்த நடிகரும் மறுக்கப் போவதில்லை என்பதே உண்மை.
இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இலங்கையில் நடந்து வருகிறது. ஸ்ரீலீலா ரவி மோகன் அதர்வா குரு சோமசுந்தரம் மலையாள நடிகர் பசில் ஜோசப் உள்ளிட்டோர் நடிப்பில் பராசக்தி படம் உருவாகி வருகிறது.
வருகிற செப்டம்பர் மாதம் வரை பராசக்தி படப்பிடிப்பு நடக்கும் சூழலில் அதன்பிறகு படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்கி, ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. சமீபத்தில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன், வருகிற பொங்கலுக்கு பராசக்தி படம் வெளியிடும் வகையில் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
வருகிற பொங்கலுக்குதான் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படமும் ரிலீஸ் ஆக ஏற்கனவே திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதனால் வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்கள் பொங்கல் ரேஸில் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன் என்று கூறப்படும் நிலையில் விஜய் படத்துக்கே சிவகார்த்திகேயன் படம் போட்டியாக வருவது தளபதி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.





