2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தமிழ் சினிமா பல்வேறு விமர்சனங்களையும், சறுக்கலையும் சந்தித்து வந்தது. பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர், அயலான் என இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற, அதற்கு அடுத்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் லால் சலாம் பலரையும் சோதிக்க வைத்தது. இதற்கு பிறகும் எந்தவொரு படங்களும் உருப்படியாக அமையவில்லை.
இந்த காலகட்டத்தில் மலையாளத்தில் வெளியான படங்கள் தமிழிலும் பம்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக மஞ்சுமல் பாய்ஸ் படத்தை பார்க்க பெருங்கூட்டம் படையெடுத்தது. இதேபோல், ப்ரேமலு, ஆவேசம் போன்ற திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் கல்லா கட்டின. தமிழில் எந்தவொரு வெற்றி திரைப்படங்களும் அமையாததால், பழைய ஹிட் படங்களை ரி-ரீலிஸ் செய்ய வேண்டிய நிலைமைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.
அதில் கில்லி திரைப்படத்தை நாம் குறிப்பிட்டு சொல்லலாம். ரி-ரிலீஸான இந்த படம், வசூலில் மீண்டும் சக்கை போடு போட்டது. பிறகு குறிப்பிட்ட இடைவேளையில் வெளியான புதிய படங்கள் எதுவும் சாதிக்காத சூழலில், தனுஷின் ராயன் படம் வசூல் ரிதீயாக சற்று ஆறுதலை கொடுத்தது. இருப்பினும் அந்த படம் விமர்சனமாக பார்க்கும்போது சொல்லி கொள்ளும்படியாக இல்லை.
தொடர்ந்து வெளியான இந்தியன் 2 திரைப்படம், திரையரங்குகளை விட்டு ரசிகர்களை ஓட வைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயின் கோட் படமும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. இப்படி தமிழ் சினிமாவுக்கு இருந்த சோதனை காலம், சற்று விலகி இருக்கிறது. லப்பர் பந்து திரைப்படம் வந்து அத்தனையும் மாற்றி இருக்கிறது என்றே கூறலாம்.
குறைந்த பட்ஜெட்டில் வெளியான லப்பர் பந்து, வசூலில் பெரிய சாதனை படைத்தது. நல்ல விமர்சனத்தை பெற்ற படத்திற்கு மக்கள் எப்போதும் வரவேற்பை கொடுக்க தவறுவதில்லை. அதற்கு லப்பர் பந்து படத்தையே உதாரணமாக கூறலாம். இதன்பிறகு வெளியான மெய்யழகன் படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. உறவுகளின் உன்னதத்தை தனக்கே உண்டான மூலம் கூறி கண்களில் ஈரம் படிய வைத்திருந்தார் இயக்குநர் பிரேம்குமார்.
பிறகு வெளியான பிளாக் படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்ட அமரன் வசூல் மழை குவித்து வருகிறது. இப்படி கடந்த 2 மாதங்களாக வெளியான இத்திரைப்படங்கள் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகள் பக்கம் திரும்ப வைத்திருக்கின்றன.





