மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோவில் முருக பெருமானின் திருத்தலங்களில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவது குறித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது பண்டைய கால இந்து பாரம்பரியம்.
இன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளை பின்பற்ற நீதிமன்றங்களை நாட வேண்டியிருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு தீர்க்கமான சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும் பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு சிறிய அமைதியான சடங்கை கூட செய்ய முடியா விட்டால் இந்த நாட்டில் அவர்களுக்கு அரசியல் அமைப்பு நீதி எங்கே கிடைக்கும்?
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாக கொண்டாட முடியுமா? ஒரு புனித நாள் நாளை கொண்டாடுவதை வேறொரு நேரத்துக்கு மாற்ற முடியுமா? ஆனால் இந்த புனிதமான கார்த்திகை தீபம் தருணம் திருடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க சனாதன தர்ம ரக்சா வாரியம் நமக்கு தேவை.
இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகி விட்டது. மற்ற மத நிகழ்வுகளின் விஷயங்களிலும் அவர்களால் இதை செய்யத் துணிய முடியுமா? இந்துக்கள் ஜாதி பிராந்தியம் மற்றும் மொழித் தடைகளால் பிரிக்கப்பட்டு இருக்கும் வரை இந்து மதமும் அதன் நடைமுறைகளும் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காமாக்யா முதல் துவாரகா வரை ஒவ்வொரு இந்துவும் தங்கள் சொந்த மண்ணில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் குறித்து விழித்துக் கொள்ளும் நாள் வரும் என்று நம்புகிறேன், என்று அந்த பதிவில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





