தமிழ் சினிமாவில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதிய காலத்திலேயே முன்னணி கவிஞராக வலம் வந்தவர் கவிஞர் வாலி. எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நடித்த ஏராளமான படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. டிஎஸ் சௌந்தர்ராஜன் குரலில் ஒலித்த எம்ஜிஆரின் பல சூப்பர் ஹிட் கொள்கை பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலிதான்.
அதே போல் ரஜினி கமல் காலத்திலேேயும் கவிஞர் வாலி எழுதிய பல ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை சொல்லலாம். கவிஞர் வாலி மீது கொண்ட அபரிதமான அன்பால் தனது ஹே ராம் படத்தில் அவரை கமல்ஹாசன் நடிக்கவும் செய்திருந்தார். இன்னும் சில தமிழ் படங்களிலும் கவிஞர் வாலி நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் பா விஜய் கூறியதாவது, ஒரே மொழியில் தமிழில் 15 ஆயிரம் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி மட்டும்தான். ஒருமுறை அவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் ஐசியுவில் இருக்கிறார். கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கிறது. அப்பவும் அவர் ஒரு படத்துக்கு பாட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்.
அவருக்கு ஏதோ பிரச்னையால் 2 நாட்களாக சிறுநீர் கழிக்க முடியவில்லை. என்ன சார் என்னாச்சு? என்று கேட்ட போது ஆமாய்யா கமல் வர்றான். ரஜினி வர்றான். ஆனா யூரின் மட்டும் வர மாட்டேங்குதய்யா என்று சொன்னார். அவர் லைப் முழுக்க அவ்வளவு ஜாலியாக இருந்தார். அவ்வளவு சிலேடையாக பேசுவார்.
என்னுடைய வீடு ஒன்று கிரஹப்பிரவேசம் நடந்தது. அப்போது கவிஞர் வாலி வந்திருந்தார். அப்போது படி ஏறினார். அய்யா படி விழுந்துடாதீங்க என்றேன். யோவ் வாலி படியிலேயும் விழ மாட்டான். யார் மடியிலேயும் விழ மாட்டான்யா என்றார். 74 வயசுல அவர் இப்படி பேசுகிறார். அவர் பேர்ல இருக்கிற மாதிரி வாலி எப்போதுமே வாலிபன்தான்.
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருப்பார். அது பெருமாளை பற்றிய பாடல்தான். ஆனால் அதில் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் என்று ஒரு வரி எழுதியிருப்பார். வாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன் தான். அதனால் தன்னையும் பெருமிதமாக அந்த வரியில் குறிப்பிட்டு இருப்பார் என்று கவிஞர் பா விஜய் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





