தெய்வப்புலவர் அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு பல பேரறிஞர்கள் விளக்க உரை எழுதியிருக்கின்றனர். அந்த வகையில் இப்போது திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்துவும் உரை எழுதியிருக்கிறார். இந்த நூலுக்கு வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்றும் பெயர் வைத்திருக்கிறார். வருகிற 13ம் தேதி இந்த நூல் வெளியாகிறது.
திரைப்பட துறையில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முன்னணி நட்சத்திர கவிஞராக வலம் வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. கடந்த 1980ம் ஆண்டில் வெளியான நிழல்கள் என்ற படத்தில் இடம்பெற்ற பொன் மாலைப் பொழுது என்ற பாடல் மூலமாக பாடல் ஆசிரியராக வைரமுத்து அறிமுகமானார்.
இன்று வரை பல ஆயிரக்கணக்கான பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இதுவரை 6 முறை சிறந்த பாடலாசிரியர் என்ற மத்திய அரசின் தேசிய விருது பெற்றிருக்கிறார். கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் என பல கவிதைகள் கதைகளை எழுதியிருக்கிறார். வள்ளுவர் மறை வைரமுத்து உரை கவிஞரின் 40வது நூலாகும்.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, உலகத் தமிழ் உறவுகளே வணக்கம். வள்ளுவர் மறை வைரமுத்து உரை புத்தகம் வருகிற ஜூலை 13ம் தேதி வெளியாகிறது. 12 வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகிறது.உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்பு ஓவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
ஓவியத்தில் அய்யன் வள்ளுவரையே மையப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் காலம் காலமாக பெற்ற வெற்றி உட்காரும் நெற்றி, சூரியனை வெட்டி ஒட்டி வைத்த கண், இந்தியாவின் தெற்கை போல் கூரிய நாசி, ஒரு வனாந்திரத்தின் ரகசியம் பேசும் மீசை முன்தோன்றிய மூத்த குடியின் தொன்மை சொல்லும் கல்லுருவம் இவற்றின் தொகுப்பு ஓவியமாக வந்திருக்கிறது முகப்பு ஓவியம்.
முதலில் ஓவியம் படைக்கிறேன். ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம் என்று அந்த வீடியோவில், கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உறை நூலின் முகப்பு ஓவியத்தை காட்டி அறிமுகம் செய்திருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





