- Advertisement -
Homeபொழுதுபோக்கு30 ஆண்டுகளுக்கு முன் பாட்ஷா படம் வெளியான போது இத்தனை சம்பவங்கள் நடந்ததா? - ஆச்சரியங்களை...

30 ஆண்டுகளுக்கு முன் பாட்ஷா படம் வெளியான போது இத்தனை சம்பவங்கள் நடந்ததா? – ஆச்சரியங்களை அள்ளித் தந்த கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ள படம் கூலி. இது அவரது 171வது படமாகும். அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகர் ரஜினிகாந்த், 2025ம் ஆண்டில் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகிறார். இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது சினிமா பயணத்தில் ஒரு படம் பெரிய திருப்புமுனையாகவும் மைல் கல்லாகவும் இருக்கும். நடிகர் ரஜினிகாந்துக்கு அப்படி ஒரு படம் என்றால் அது பாட்ஷா தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டில் இந்த படம் வெளியாகி மாஸ் ஹிட் தந்தது. இப்போது பாட்ஷா ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

பாட்ஷா படம் குறித்து கவிஞர் வைரமுத்து, தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில் வைரமுத்து கூறியிருப்பதாவது, பாட்ஷா படத்தின் மறு வெளியீடு சில தகவல்களை பரிமாறுமாறு கூறுகிறது. எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ என்ற பாட்டு அவசரம் கருதி எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது.

தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு என்ற பாட்டு ஆண் குரலுக்காக மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, ஜேசுதாஸ் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதிலும் இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக என்ற வரியை ரண்டு புறம் என்று பாடியிருக்கிறார் பாடகர். நான் எவ்வளவோ முயன்றும் அதை மீண்டும் திருத்த இயலவில்லை.

- Advertisement -

அமெரிக்காவிலிருந்து வைரமுத்து வரட்டும் என்று பாராட்டுவிழாவைத் தள்ளி வைத்திருந்தார் ரஜினி. எம்ஜிஆரின் உச்சம் நாடோடி மன்னன். ரஜினியின் உச்சம் பாட்ஷா. இந்த இரண்டு படங்களிலும் சம்பந்தப்பட்டவர் ஆர்எம்வீ என்று பாராட்டினேன். இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சர்ச்சை பேச்சு பேசப்பட்டதும் அங்கே தான். ஆர் எம் வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும் அதை தொடர்ந்துதான்.

தமிழ்நாட்டின் கலை அரசியலோடு கலந்து போன படம் பாட்ஷா. அதில் எனக்கு பிடித்தது சண்டைக்கு தயாராகும் முன் ரஜினி சொல்லும் வசனம், உள்ளே போ. இப்போது பார்த்தாலும் நரம்பு முறுக்கேறி இரும்பாகி விடுகிறது. இதை ரஜினியிடமே சொல்லி இருக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் பெருமையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்