நடிகை சரண்யா பொன்வண்ணன், டைரக்டர் மற்றும் நடிகருமான பொன்வண்ணனின் மனைவி. மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் அறிமுகமான சரண்யா, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் கருத்தம்மா படம் சரண்யாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்து மனசுக்கள் மத்தாப்பூ, பசும்பொன், என் ஜீவன் பாடுது, தாயம் ஒண்ணு, சகலகலா சம்பந்தி, அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக, நான் புடிச்ச மாப்பிள்ளை, கோட்டை வாசல், சீவலப்பேரி பாண்டி, மீண்டும் சாவித்திரி, அருள், வர்ணஜாலம் என பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் சரண்யா நிறைய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சரண்யா ஏற்கனவே நடிகர் மற்றும் இயக்குனர் ராஜசேகரை திருமணம் செய்தவர். சில ஆண்டுகளில் அவரை விட்டு விலகிவிட்டார். கருத்தம்மா படப்பிடிப்பின் போது, உதவி இயக்குனராக அந்த படத்தில் பணிசெய்த பொன்வண்ணன், தன் வீட்டில் தனக்கு பெண் பார்ப்பதால், சரண்யாவை திருமணம் செய்ய விரும்பியிருக்கிறார். பிறகு பாரதிராஜாவே சரண்யா வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் பேசி சரண்யா – பொன்வண்ணன் திருமணத்தை முடித்து வைத்திருக்கிறார்.
திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நடிகை சரண்யா, மீண்டும் அக்கா மற்றும் அக்கா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக ராம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தென்மேற்கு பருவக்காற்று, தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதி, எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, கிரீடம், களவாணி, முத்துக்கு முத்தாக என உதயநிதி, தனுஷ், அஜீத், ஜீவா, கருணாஸ், பரத், விமல் போன்ற ஹீரோக்களுக்கு அம்மாவா நடித்து அசத்திக்கொண்டு இருக்கிறார்.
நடிகை சரண்யா, தன் கணவர் பொன்வண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவர், சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அங்கு பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதாவது, நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்மணிக்கும் காரை அந்த இடத்தில் பார்க்கிங் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், அவருக்கு சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாக, கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து போலீசார் சரண்யா பொன்வண்ணனிடம் விசாரிக்க உள்ளனர். சமீபத்தில் செம ஹிட் படமாக அமைந்த பார்க்கிங் படத்தில் எம்எஸ் பாஸ்கர் – ஹரீஷ் கல்யாண் கார் பார்க்கிங் பிரச்னை போலவே இருப்பதால் எம் எஸ் பாஸ்கரை விசாரணைக்கு கூப்பிடுங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து கிண்டலடிக்கின்றனர்.





