காமெடி நடிகர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியே அவரை நல்ல நடிகராக வெளிப்படுத்தியதால் ஆரம்பத்தில் பல படங்களில் பரோட்டா சூரி என்றுதான் டைட்டில் கார்டில் அவரே பெயரே காட்டப்பட்டது. ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் பெற்ற பிறகுதான் சூரி என டைட்டில் மாறியது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி விஜய் அஜீத்குமார் தனுஷ் படங்களில் காமெடி செய்துக்கொண்டிருந்த சூரியை, திடீரென விடுதலை படத்தில் கதாநாயகனாக மாற்றி நடிக்க வைத்தார் வெற்றிமாறன். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் பழைய படங்களின் காமெடி சாயல் சிறிதும் இன்றி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி சூரியும் அசத்தி இருந்தார்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத நிலையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படம் அவருக்கு பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அடுத்து கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
இப்போது சூரி நடித்த மாமன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தாய் மாமன் உறவை மையப்படுத்திய இந்த கதைக்களத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. படத்தில் நடித்த ராஜ்கிரண் சுவாசிகா ஐஸ்வர்யா லட்சுமி போன்ற மற்றவர்களின் கேரக்டர்களும் படத்துக்கு நல்ல பலத்தை சேர்ந்திருக்கிறது.
மாமன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நடந்த மாமன் பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், நான் தயாரிப்பாளராக இருப்பதால் என்னிடம் வரும் 10 கதைகளில் 5 கதைகள் சூரிக்காக எழுதப்பட்டதாக இருக்கின்றன. சூரியின் இந்த வளர்ச்சி எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது என்று வெளிப்படையாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூரி கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் இப்படி பேசி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இன்று உள்ள டாப் இயக்குனர்களில் இந்திய சினிமாவே திருப்பிப் பார்க்கும் இயக்குனர்களில் அவரும் முக்கியமான ஒருவர். அவருடைய தயாரிப்பின் கீழ் 3 கதைகளை சொல்லி இருக்கிறார்கள். வருங்காலத்தில் அவருடைய தயாரிப்பில் நான் கண்டிப்பாக நடிப்பேன். அதுமட்டுமல்ல அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. அதுவும் சீக்கிரமாக நடக்கும் என நினைக்கிறேன் என்று நடிகர் சூரி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





