புஷ்பா திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜுனின் திரை உலக பயணத்தை திருப்பி போட்டு இருக்கிறது. அதற்கு முன்பு ஏராளமான வெற்றி திரைப்படங்களை தெலுங்கு சினிமாவில் அவர் கொடுத்திருந்தாலும், புஷ்பா திரைப்படம்தான் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது. அதன் முதல் பாகமும் சரி இரண்டாம் பாகமும் சரி தனக்கு உண்டான கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக செயல்பட்டு இருப்பார் அல்லு அர்ஜுன்.
புஷ்பராஜ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தனது தாடியை சீவிக் கொண்டே பேசும் ஒவ்வொரு டயலாக்குகளும் திரையரங்குகளை தெறிக்க விட்டன. ஆக்சன் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம், இந்திய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்ததற்காக, தேசிய விருதையும் அல்லு அர்ஜுன் பெற்றார்.
இதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது. தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்னும் பெருமையை அது பெற்றது. இதன் காரணமாக அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்படம் மீதான பார்வை பலரது பக்கமும் திரும்பி இருக்கிறது.
இதில் அவர் அடுத்ததாக அட்லியுடன் கைகோர்த்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. தீபிகா படுகோன் கதாநாயகியாக வருகிறார். இதுபோக மூன்று கதாநாயகிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படங்களிலேயே மிகப்பிரமாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அறிவியல் மற்றும் வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்கான கிராபிக்ஸ் காட்சிக்கான பணிகள் வெளிநாடுகளில் தயாராகின்றன. தற்போது இதன் படப்பிடிப்பு பணிகள் மும்பையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்க இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு இதனை தயாரிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ராவணம் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ராமாயணத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் ராவண கதாபாத்திரத்தை மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.





