நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் கம்பேக் கொடுத்த படமாக கருப்பு அமைந்து விட்டது. சிங்கம் 2 படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்த படம் தான் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சூர்யா படங்களில் அதிகபட்சமாக ரூ. 340 கோடி வரை வசூலை அள்ளியது கருப்பு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா திரிஷா ஷிவதா சுவாசிகா மலையாள நடிகர் இந்திரன்ஸ் நட்டி நடராஜ் ஆடுகளம் நரனே் ஓம் நமோ நாராயணா வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் கருப்ப சாமியை மையப்படுத்தி ஒரு பக்தி படமாகவும் இருந்தது. அதுவே வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால் கருப்பு படம் ரிலீஸ் ஆவதில் பலத்த சிக்கல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் 14ம் தேதி ரிலீஸ் என அறிவித்த நிலையில் அன்று படம் ரிலீஸாகவில்லை. மறுநாள் 15ம் தேதி தான் ரிலீஸ் ஆனது. இதற்கு 150 கோடி ரூபாய் கடன்களை நடிகர் சூர்யா ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடன்களை பொறுப்பேற்ற நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாட்டின் தியேட்டரிக்கல் உரிமம் வழங்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் வசூல் வாயிலாக கிடைத்த லாபம் முழுவதும் நடிகர் சூர்யாவுக்கு சென்றுவிட்டது. அதே போல் தயாரிப்பாளருக்கு நான் தியேட்டரிக்கல் அதாவது சேட்டிலைட் டிஜிட்டல் ஆடியோ உரிமம் வாயிலாக கிடைக்கும் தொகை கிடைத்துள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் கருப்பு படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் பைனான்ஸ் தந்த பலரும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் பாக்கியை வசூலிக்க திரண்டு வந்துவிட்டனர். ஏனென்றால் ஓடிடியில் படம் ரிலீஸானால் அங்கிருந்து பெரிய தொகை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்பதால் அந்த பணத்தை வசூலிக்க படையெடுத்து உள்ளனர்.
ஆனால் ஏற்கனவே சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். அதனால் கருப்பு படத்தின் டிஜிட்டல் சாட்டிலைட் வருவாயை வைத்துதான் மார்ஷல் படப்பிடிப்பை அவர் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த சூழலில் அண்ணன் படம் கொடுத்த லாபத்தை வாங்க பைனான்ஸியர்கள் போட்டி போடுவது அவரது தம்பி நடித்து வரும் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் இந்த தகவலை கூறியிருக்கிறார்.





