ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தில் விஜய் 3 ரோல்களில் நடித்துள்ளார். சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். வசீகரா படத்துக்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து சினேகா இந்த படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார்.
அப்பா மகன் என 2 வேடங்களில் விஜய் நடித்துள்ள நிலையில் மீனாட்சி செளத்ரி மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ரம்யாகிருஷ்ணன், கனிகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக 3வது பாடல் வெளியாகிறது. இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, திரிஷா இதுவரை அவர் நடிக்காத எந்த படத்திலும் இதுவரை அயிட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடாத திரிஷா, இந்த படத்தில் விஜயுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தை தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்றே இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அழைக்கின்றனர். படம் குறித்த விளம்பரங்களிலும், பர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், தேர்டு சிங்கிள் விளம்பரங்களிலும் இதுவரை தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்றே படத்தின் பெயர் வருகிறதே தவிர, தி கோட் என எந்த அறிவிப்பிலும் அவர்கள் குறிப்பிடுவதில்லை.
தற்போது வெளியான தகவலின்படி, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தி கோட் என அவர்கள் அழைக்கவோ, குறிப்பிடவோ முடியாது. ஏனெனில் ஏற்கனவே அந்த பெயரில் ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்துவிட்டார். மேலும் அந்த தலைப்பை பெற விஜய் படக்குழு தரப்பில் முயற்சித்த போது, அதிக தொகை கேட்டதால் அவர்களால் அதை ஏற்க முடியவில்லை. அதனால் தி கோட் அல்ல, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்றே இந்த படம் அழைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.





