பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா, கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் ராமராஜன் ஹீரோவாக நடித்த கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படம் இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது.
கரகாட்டக்காரன் படத்தின் அபாரமான வெற்றிக்கு பிறகு நடிகை கனகா பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக ரஜினியுடன் அதிசய பிறவி விஜயகாந்துடன் கோவில் காளை பிரபுவுடன் தாலாட்டு கேக்குதம்மா மம்முட்டியுடன் கிளிப்பேச்சு கேட்கவா சரத்குமாருடன் சாமுண்டி கார்த்திக்குடன் பெரிய வீட்டு பண்ணக்காரன் நடிகர் விவேக் ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம் என பல படங்களில் நடித்தார். அந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் நடிகை கனகா காணாமல் போய்விட்டார். குறிப்பாக 2002ம் ஆண்டில் கனகாவின் தயாார் தேவிகா மறைவுக்கு பிறகு கனகா சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. இப்போதும் நடிகை கனகா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
நடிகை கனகா குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்தவர் கனகா. அவரது அம்மா தான் அவருக்கு உலகமாக இருந்தார். அம்மா மகள் பாசப்பிணைப்பு அப்படி இருந்தது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தனர். ஆனால் தேவிகா மறைவுக்கு பிறகு கனகா அப்படியே முடங்கிப் போய்விட்டார்.
அவரால் தனியாக கதைகள் கேட்டு சினிமாவில் நடிக்க முடியவில்லை. அம்மாவின் துணையின்றி அவரால் சுத்தமாக செயல்பட முடியவில்லை. இதற்கிடையே புருஷோத்தமன் என்ற அமெரிக்க வாலிபரை திருமணம் செய்துக்கொண்டதாக கனகா ஒருமுறை பிரஸ்மீட்டில் கூறியிருந்தார். ஆனால் அது உண்மையா, பொய்யா என்பதில் குழப்பமும் சந்தேகமும்தான் உள்ளது.
கனகாவை பற்றி பேசினாலே நிறைய குழப்பங்கள்தான் வரும். அவரது திருமணமே ஒரு சந்தேகம்தான். தனிமையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி கூட அவர் திருமணம் செய்துவிட்டதாக கூறியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் உள்ளது. கனகா மட்டும் அம்மாவின் துணையை நம்பாமல் சினிமாவில் இருந்திருந்தால் ஒரு பெரிய நடிகையாக ஜொலித்திருப்பார் என்று பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





