எந்த பொருளாக இருந்தாலும் விலை கொடுத்து வாங்கி விட்டால் அந்த பொருள் வாங்கியவருக்கு மட்டுமே சொந்தம். பிறகு அந்த பொருளை விற்றவர் உரிமை கொண்டாட முடியாது. இதுதான் வணிகத்தின் நியதியாக நீதியாக இருந்து வருகிறது. ஆனால் திரைப்பட துறையில் மட்டும் இது வித்யாசமான விதிமுறைகளை கொண்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அந்த படத்தில் நடிக்கவும் இயக்கவும் பாடல் எழுதவும் பாடல் பாடவும் இசையமைக்கவும் என அனைத்துக்கும் சம்பளம் கொடுத்து விடுகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஆகிற எல்லா செலவுகளும் போக்குவரத்து உணவு உட்பட எல்லாமே தயாரிப்பாளர்தான் சம்பளமாக தருகிறார் என்னும் போது எல்லாருமே உழைப்பை மட்டுமே அந்த படம் உருவாக தருகின்றனர்.
ஆனால் இசையை பொருத்த மட்டில் அந்த படத்தில் இசையமைத்த எனக்கு மட்டுமே சொந்தம் என்று இசைஞானி என்று கொண்டாடப்படும் தமிழ் சினிமா இசையமைப்பாளர் வாதாடி வருகிறார். அவருடைய பாடல்களை இன்றைய புதிய படங்களில் பயன்படுத்தினால், அதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். பல லட்சம், சில கோடி ரூபாய் என நஷ்ட ஈடும் கேட்கிறார்.
இசையில் அவர் ஒரு ஜாம்பவனாக அழியாப் புகழ் கொண்டு விளங்கும் நிலையில் ஏற்கனவே செல்வச் சீமானாக அவரது வாழ்க்கை பொருளாதார நிலை உள்ள நிலையில், 84 வயதுகளை கடந்த இந்த முதுமை வயதில் இப்படி தனது இசையால் உருவான பாடல்களுக்கு காப்பிரைட் கொண்டாடுவதும் கோர்ட்டில் வழக்கு தொடுப்பதும் ஒரு விதத்தில் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, எனக்கு தெரிந்து ஒரு வருஷத்துக்கு 40 கோடி ரூபாய் அவருக்கு வருகிறது. ராயல்டி மூலமாக. நான் கேள்விபட்ட வகையில் இளையராஜாவுக்கு இசை ராயல்டி மூலமாக 40 கோடி ரூபாய் வருஷந்தோறும் வருகிறது.
ஒருத்தர் வேலையே செய்யாமல் இதுக்கு முன்னாடி செஞ்ச வேலைக்கு ராயல்டி பேர்ல பல வருஷங்களாக 40 கோடி ரூபாய் வந்துட்டு இருக்கு. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் போது உங்களுக்கு எதுக்கு பணம்? அதை வெச்சு என்ன பண்ண போறீங்க? என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





