தமிழ் சினிமாவில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே, அது குறித்த பெரிய எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றால் அது வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படமாகத் தான் இருக்கும். தனுசை வைத்து அசுரன் திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு, வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் பணி புரிவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். இதற்கான டெஸ்ட் சூட்டிங்கும் நடத்தப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு தொடர்பான சில பயிற்சிகளில் சூர்யா ஈடுபட்டிருந்தார். சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் குறுநாவலை மையப்படுத்தியே இதன் திரைக்கதையை அமைக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார்.
அந்த சமயத்தில் சூர்யா வேறு ஒரு பிராஜெக்ட்டில் கவனம் செலுத்தி வந்ததால், வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில் விடுதலை படத்தை எடுக்க சென்று விட்டார் வெற்றிமாறன். மிகச் சிறிய பட்ஜெட்டில், குறைந்த நாட்களில் இந்த படத்தை முடிக்க அவர் திட்டமிட்டார். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதில் செலவிட்டார் வெற்றிமாறன். அண்மையில் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி, சுமாரான வரவேற்பையே பெற்றது. இப்படியான சூழலில் தற்போது, மீண்டும் தனது வாடிவாசல் திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் வெற்றிமாறன்.
ஏற்கனவே இது தொடர்பான அனிமேஷன் காட்சிகளுக்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் வாடிவாசல் திரைப்படத்தில் இசையமைப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள். தற்போது சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன்பிறகு அவர் வாடி வாசலில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன் சில நாட்களுக்கு முன்பு ஒரு டியூனை எனக்கு அனுப்பினார். அதை இப்போது நான் கூறிவிட்டால் வைரல் ஆகிவிடும். படத்தின் திட்டம் குறித்து சூர்யாவுடன் வெற்றிமாறன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தத் திரைத்துறை இண்டஸ்ட்ரியில் வெற்றிமாறன் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார்.





