அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்தத் திரைப்படத்தில், வில்லனாக வருகிறார் ரவி மோகன். ஸ்ரீ லீலா கதாநாயகி ஆக நடிக்க, அதர்வாவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இட்லி கடை திரைப்படத்தை தொடர்ந்து இதனையும் dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தி திணிப்புக்கு எதிராக பேசுவது தான் இந்த திரைப்படத்தின் கதைக்களமாம். 1965 ஆம் காலகட்டங்களில் நடைபெறுவது போன்ற கதையைத்தான் இதில் படமாக்கி வருகிறார் சுதா கொங்கரா. இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாக, சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா நடிக்கின்றனர்.
அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து அறிவிப்பு டீசர் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் உட்பட படத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைவரது கதாபாத்திரத்தையும் அறிமுகம் செய்து வைத்தார் சுதா கொங்கரா. அதிலும் வீடியோவில் இசை நன்றாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
ஜிவி பிரகாஷ் தான் இதற்கு இசை அமைத்து வருகிறார். அவரது நூறாவது திரைப்படமாக உருவாகி வருவது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் எடுக்கப்பட்டது. குறிப்பாக பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே உள்ள கட்டடத்தில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் மற்றும் காரைக்குடியில் சூட்டிங்கை நடத்தினார் இயக்குனர் சுதா கொங்கரா. தற்போது இலங்கையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பராசக்தி திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பகிர்ந்துள்ளார். அதில்,
ஆர் ஆர் ஆர் திரைப்படம் போன்று, ஒரு மிகப்பெரிய அளவில் பீரியாடிக் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. கதைக்கான தத்ரூப இடங்களை காட்டுவதற்காக, நாங்கள் நேரடியாக அந்தந்த இடங்களுக்கே சென்று படமாக்கி வருகிறோம். ஒரு மிக முக்கியமான டைட்டிலை இந்த திரைப்படத்திற்கு நாங்கள் வைத்திருக்கிறோம். படத்தை ஆரம்பிக்கும் போதே இதனை நாங்கள் முடிவு செய்து விட்டோம். மலையாள நடிகர் பஸில் ஜோசப் இடம்பெற்று இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது.





