தெலுங்கில் வெளியாகி, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படங்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக பாகுபலி, ஆர்ஆர்ஆர் அருந்ததீ ஈ புஷ்பா சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் உள்பட பல படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டில் இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றி பெற்றது. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் நடிப்பு வேற வேற லெவலில் இருந்தது.
புஷ்பா படத்தை தொடர்ந்து புஷ்பா 2 தி ரூல் படம் 3 ஆண்டுகளாக உருவானது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் 3 மாதங்கள் 20 நாட்கள் தாமதமாக கடந்த 5ம் தேதி வெளியானது. புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த 2ம் பாகம் படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா வில்லன் கேரக்டரில் பகத் பாசில், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாடல்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சிஎஸ் அமைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு இந்தி பெங்காலி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா 2 வெளியானது. முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் புஷ்பா படம் 7 நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது. இந்திய அளவில் குறைந்த நாட்களில் அதிக வசூலை சாதித்த படம் என்ற பெருமையும் புஷ்பா 2 படத்துக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் உலக அளவில் புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிஸில் 1190 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே 800 கோடி ரூபாய்க்கு மேல் புஷ்பா 2 படம் வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதுவரை 65 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





