கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றிபெற்ற திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தை சுகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளியானது. சமந்தா இடம்பெற்ற “ஊ சொல்றியா” என்ற பாடலை நாம் மறந்திருக்க முடியாது. இந்த பாடலுக்கு இந்தியாவே குத்தாட்டம் போட்டது.

தெலுங்கு மசாலா திரைப்பட வரிசையில் இத்திரைப்படம் இணைந்திருந்தாலும் அல்லு அர்ஜூனின் அட்டகாசமான நடிப்பு தென்னிந்திய ரசிகர்களை மட்டுமல்லாது வட இந்திய ரசிகர்களையும் ஈர்த்தது. ஒரு பக்காவான கம்மெர்சியல் திரைப்படமாக இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு “புஷ்பா 2” திரைப்படத்தின் அட்டகாசமான இன்ட்ரோ வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது. அந்த வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்படப்பிடிப்பில் நடித்து முடித்த துணை நடிகர்கள் பலரும் பேருந்தில் ஹைதராபாத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் துணை நடிகர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒரு அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு துணை நடிகர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.





