ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பிஸியாகி இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். சமீப காலங்களாகவே இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வந்தன. நடிப்பை தாண்டி பலருக்கு உதவி செய்து வரும் அவர், தன்னைத் தீவிர ரஜினி ரசிகராக காட்டிக் கொண்டு வருகிறார். தனது மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில், தனது பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியை அவர் வைத்தார்.
இது ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் சலிப்பை கொடுத்தது. எதற்காக இவர் இப்படி ஒரு பட்டத்தை வைக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்டனர். இதனையே, சமீபத்தில் அளித்த பேட்டியிலும் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். எதேச்சையாக அந்த பெயரை தான் வைத்ததாகவும், அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அவர் கேட்டிருந்தார். இருப்பினும் ரஜினி ரசிகர்களை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மக்கள் சூப்பர் ஸ்டார் படத்தை தவிர்த்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இப்படியான சூழலில் சமீபத்தில் அவர் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் முழுக்க முழுக்க ரஜினியின் பின்பத்தையே அவர் காட்டி இருப்பதாகவும், அது சுத்தமாக எடுபடவில்லை என்றும் பலர் கூறினர். படமும் எதிர்பார்த்ததைப் போலவே படு தோல்வியை சந்தித்தது. ராகவா லாரன்ஸ் இப்படியான கதைகளில் அடிப்படை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தில் அவர், அசால்ட்டு சேது கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது நடக்காமல் போக, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரத்தின் மூலம் தேசிய விருதை பெற்றார்.
இப்படியான சூழலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த ராகவா லாரன்ஸ், பலராலும் பாராட்டப்பட்டார். தற்போது அவர் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். ஹாரர் திரைப்படமாக உருவாகும் இதனை, லோகேஷ் கனகராஜ் நண்பரும், மேயாத மான், ஆடை, குளுகுளு திரைப்படங்களை இயக்கிய ரத்னவேல் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த திரைப்படத்திற்கு பிறகு அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தியுடன் இணைகிறார் ராகவா லாரன்ஸ். இந்த வருடத்தில் வெளியான ஆகச் சிறந்த பீல் குட் திரைப்படங்களில் ஒன்றான அயோத்தி பலரையும் பெரிதாக கவர்ந்தது. தற்போது இந்த இயக்குனருடன் லாரன்ஸ் இணைந்து இருப்பதால் பலருக்கும் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அயலான் பட இயக்குனர் ரவிச்சந்திரன் உடனும் ராகவா லாரன்ஸ் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





