இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்து பிறகு நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ராஜகுமாரன். பார்த்திபன் தேவயானி நடித்த இந்த படத்தில் கெஸ்ட்ரோலில் மிலிட்டரி ஆபீசர் கேரக்டரில் நடிகர் அஜீத்குமார் நடித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி இந்த படத்தை தயாரித்திருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நீ வருவாய் என படத்தை 2ம் பாகம் 3ம் பாகம் என 2 படங்களாக இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாகவே அந்த 2 பாகங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். ஏற்கனவே அஜீத்குமார் தரப்பில் இதுபற்றி பேசி விட்டோம்.
அவர்களும் கண்டிப்பாக பண்ணலாம் என்றுதான் கூறியிருக்கின்றனர். அதனால் கண்டிப்பாக அந்த 2 பாகங்களையும் நான் இயக்குவேன் என்பது உறுதி. இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் சம்பளம் படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரியிடம் இன்னும் பேசவில்லை. அந்த விஷயங்கள் எல்லாம் கைகூடி வரவேண்டும்.
நீ வருவாய் என படத்தில் கதைப்படி நடிகர் அஜீத்குமார் இறந்துவிடுவார். அதுதான் கதை. ஆனால் அவர் இறந்தது போல நான் படத்தில் காட்டவில்லை. ஒரு ரத்தம் படிந்த சட்டையை மட்டுமே காட்டி கதாநாயகி மயங்கி விழுவதை போல காட்டியிருப்பேன். அஜீத்குமார் இறந்தது போல காட்டினால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எனக்குமே அது பிடிக்காது.
ஒரு ஹீரோ இறந்து போனதைக் கூட காட்சிகளில் காட்ட விரும்பாத ஒரு நல்ல இயக்குனர் நான். அதுதான் எனக்கு இப்போது உதவப் போகிறது. இனி எடுக்கும் படங்களில் அஜீத்குமார் இறக்கவில்லை. அவர் மிலிட்டரிக்கு தான் போனார் என்று கதையை மாற்றி விடுவேன்.
நீ வருவாய் என 2ம் பாகத்தை விட 3ம் பாகத்தில்தான் அஜீத்குமாருக்கு காட்சிகள் அதிகம். அதனால் 2 பாகங்களையும் ஒரே காலகட்டத்தில்தான் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இன்றைக்கு நடிகர் அஜீத்குமார் மாஸ் ஹீரோவாக பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் நிலையில், ராஜகுமாரன் சொல்வது உண்மையில் நடக்குமா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.





