இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ராஜமவுலியை கைகாட்டி விடலாம். இதற்கு அவர் எடுத்த பாகுபலி திரைப்படமே சாட்சி. சாதாரண ஒரு கதை தான் என்றாலும், அதனை திரைக்கதை வடிவில் அழுத்தம் திருத்தம் இல்லாமல் சுவாரசியத்தை கூட்டி கொடுத்தால் இங்கு எதிலும் வெற்றி பெறலாம் என்பதை ஆணித்தரமாக அடித்துக் காட்டியவர் தான் ராஜமவுலி.
பாகுபலி திரைப்படத்தின் பாகம் ஒன்றும் சரி இரண்டும் சரி இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னர் ஆட்சியில் ஒரு அரியணைக்காக சண்டையிடும் களத்தை பிரம்மாண்டத்துடன் காட்சிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருந்தார் ராஜமௌலி.
இதன் காரணமாகவே இரண்டு பாகங்களும் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல், தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டது. உலக சினிமாவும் பாகுபலி திரைப்படத்தை திரும்பிப் பார்த்தது. அதிலும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இப்படி பாகுபலி திரைப்படத்தின் மூலம்தான் ராஜமவுலி அடுத்த கட்டத்திற்கு சென்றார். உலகம் போற்றும் இயக்குனராகவும் உயர்ந்தார். இதற்கு அடுத்ததாக அவர் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கினார். தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படமும் அதனை முழுமையாக பூர்த்தி செய்தது. வசூலிலும் சக்கை போடு போட்டது. அதில் இடம்பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை அள்ளி சென்றது. இப்படி ராஜமவுலி சினிமா மார்க்கெட்டில் சிம்ம சொப்பனமாக இருக்க அவரது அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போதே அவர், மகேஷ்பாபு உடன் இணைந்து பணியாற்றுவது உறுதியானது.
இதுவும் முழுக்க முழுக்க பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இதன் பிரீ ப்ரோடுக்ஷன் பணிகளில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு இருக்கிறார் ராஜமௌலி. இப்படியான சூழலில் தான் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் 2026 ஆம் ஆண்டு இறுதியில் இதன் சூட்டிங் பணிகள் நிறைவடையும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 2027 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறுகிறார்கள். இதில் மகேஷ்பாபுவுக்கு கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





