கடந்த 1984ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். இந்த படத்திற்கு அப்போது வைத்த தலைப்பு அன்புள்ள எம்ஜிஆர். அந்த காலத்தில் சினிமா கதாசிரியர் துாயவன் தயாரிப்பாளர் தமிழ்மணியும் நெருங்கிய நண்பர்கள்.
அவர்கள் இருவரும் டில்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் டச் ஆப் லவ் என்ற படத்தை பார்த்தார்கள். அந்த படத்தில் எல்லிஸ் பிரஸ்லி என்ற பிரபல பாப் பாடகரின் ரசிகையாக உடல் ஊனமுற்ற சிறுமி ஒருவர் இருப்பார். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் கடிதத்திலும் டெலிபோனிலும் பேசிக்கொள்வார்கள்.
அந்த சிறுமி இறப்பதற்கு முன்பாக எல்லீஸ் பிரஸ்லியை சந்திக்க விரும்புவாள். இருவரும் சந்திப்பார்கள். இப்படி நெகிழ்ச்சியான படமாக அது இருந்தது. இந்த படத்தை பார்த்த பிறகு இதே கதையை தமிழில் படமாக எடுக்க விரும்பிய அவர்கள் இருவரும், அந்த பாப் பாடகர் கேரக்டரில் நடிக்க எம்ஜிஆர் தான் சரியான நடிகர் என்று முடிவு செய்து அவரை சந்தித்து கதை சொன்னார்கள். கதையைக் கேட்டு எம்ஜிஆர் பல காட்சிகளில் கண்கலங்கினார்.
அப்போது முதல்வராக எம்ஜிஆர் இருந்த போதும், சில காட்சிகள் தானே நடிக்க வேண்டும் என்பதால் அந்த படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அமைச்சர் அரங்கநாயகத்திடம் பேசுங்கள் என்றும் கூறிவிட்டார். படத்தை நானே தயாரிப்பதாக இருந்தால் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கிறேன் என்று அமைச்சர் அரங்கநாயகம் கூறியிருக்கிறார். இதனை ஏற்க மறுத்து அந்த நண்பர்கள் இருவரும், இதே கதையை பிறகு நடிகர் ரஜினியிடம் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி உடனே அந்த படத்தை ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு படத்தின் தலைப்பும் அன்புள்ள ரஜினிகாந்த் என்று மாற்றப்பட்டது. இந்த படத்தில் சம்பளம் எதுவும் பெறாமல் 10 நாட்கள் நடித்துக் கொடுத்தார் ரஜினிகாந்த். அன்புள்ள ரஜினிகாந்த் படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சிறுமியாக நடிகை மீனா, ரஜினியை நேசிக்கும் சிறுமியாக நடித்திருந்தார். மீனாவின் அம்மாவாக நடிகை அம்பிகா நடித்திருந்தார்.
இதில் பாக்யராஜ் – ரஜினி நடித்த டிராமா காட்சியும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில்தான் லதா ரஜினிகாந்த் பாடிய கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே என்ற பாடலும் இடம்பெற்றது. ரஜினியின் நெருங்கிய நண்பர் நடராஜன் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். இதில் ரஜினிகாந்த், நடிகர் ரஜினிகாந்தாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் நடிக்க ஒத்துக்கொண்ட இந்த படம்தான் ரஜினி நடித்த படமாக பிறகு மாறியது. இந்த படத்தில் சிறுமியாக நடித்த மீனா பிறகு எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





