நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வேட்டையன் படம் ரிலீஸாகி உள்ளது. தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் குறித்த விமர்சனங்கள் இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்போது மருத்துவ சிகிச்சை காரணமாக படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ள ரஜினி, சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்கிறார்.
இதற்கிடையே 2018 என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஏற்கனவே நடிகர் சிம்பு நடிக்கும் ஒரு படத்தை மலையாள பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்க உள்ளதாகவும், அதை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்து விட்டதால், தக்லைப் படத்தை தொடர்ந்து சிம்பு அந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், நடிகர் சிம்பு இந்த படத்தில் நடிக்க ரூ. 25 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், அதனால் ஐசரி கணேஷ் மறுத்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. அதனால் சிம்பு அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதனால் சிம்பு நடிக்க வேண்டிய கதையில்தான் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று சமீபமாக தகவல் வைரலானது.
ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் சொன்ன கதையில் சிம்புதான் நடிக்கிறார். அதுவும் 25 வயது இளைஞராக டீஏஜிங் இல்லாமல், உடம்பை குறைத்து சிம்பு நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. அதே போல் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ரஜினி நடிக்கும் படத்தையும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். ஆனால் அது வேறு கதை என்றும் தற்போது தெரிய வந்துள்ளது. ஆக, சிம்புவுக்கு சொன்ன கதையில் ரஜினி நடிக்கவில்லை என்று உறுதியாகி உள்ளது.





